Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

பெண்கள் புரட்சி
ந.சி. கந்தையா



 


1. பெண்கள் புரட்சி
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5.  கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7.  பெண்கள் புரட்சி

 


பெண்கள் புரட்சி

 

ந.சி. கந்தையா

 

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : பெண்கள் புரட்சி
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

பெண்கள் புரட்சி


முன்னுரை
பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள்; அவர்கள் ஆடவருக்கு எல்லாவகையிலும் கட்டுப்பட்டு ஒழுகும் கடப்பாடுடையர்; பெண் பிறவி பாவமிகுதியினால் உண்டாவது என்பன போன்ற பொல்லாத கொள்கைகள் இன்றைய மக்களிடையே காணப்படுகின்றன. உண்மையில் பெண்களே ஆடவரிலும் உயர்ந்தவர்களாகவும், அவர்களைச் சீர்திருத்தியவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்று பெண்கள் ஆடவருக்கு அடிமைப்பட்டு இருப்பது பொருளாதார நிலை ஒன்றினாலேயே யாகும். பெண்கள் வாழ்க்கைச் செலவுக்கு ஆடவரின் கையை எதிர்பாராது தாமே பொருள் ஈட்டும் நிலையில் இருப்பார்களேயாயின் அவர்கள் ஆடவருக்குக் கட்டுப் பட்டு நடக்கும் கட்டாயம் உண்டாகாது. தொடக்கத்தில் பெண்களே பயிர்த் தொழில் கைத்தொழில்கள் புரிந்து ஆடவருக்கும் உணவு அளித்து வந்தார்கள். அதனால் ஆடவர், மகளிருக்குப் பணிந்து நடந்தார்கள். பெண்கள் ஆட்சியே ஆதியில் நடைபெற்றது. பிற்காலத்தில் ஆடவர் சுயநலங் கருதி அவர்களின் பொருளாதார நிலையைப் பரித்து அவர்களைத் தமக்கு அடங்கி நடக்கும்படி செய்தனர். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடத்தல் இயற்கை விதியன்று; ஆண்கள் பெண்களுக்கு அடங்கி நடத்தலே இயற்கை விதியாகும். இவைபோன்ற பெண்களின் பிறமாண்புகளை வரலாற்று முறையில் ஆராய்ந்து கூறுகின்றது இந்நூல்.

சென்னை

10.05.46

ந.சி. கந்தையா

பெண்கள் புரட்சி
தோற்றுவாய்

ஆதியில் பெண்கள் ஆடவரைவிட உயர் நிலையில் இருந்தார்கள். அவ்வரலாறு இன்று மறக்கப்பட்டது. சில செயற்கைக் காரணங்களால் இன்று அவர்கள் தமது உயர் நிலையினின்றும் வீழ்ச்சியடைந்தனர். ஆடவருக்குப் பணிந்து நடக்கும்படி பெண்கள் கடவுளாற் படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ஆண்களுக்குப் பணிந்து நடத்தலே இயற்கை விதியென் றும் நம்பப்பட்டு வருகின்றன. பெண்களின் வரலாற்றை ஆராயுமிடத்து உண்மை இதற்கு நேர்மாறாகவுள்ளது. ஆட்சியும் சொத்துரிமையும் நீண்ட காலம் பெண்களிடமே இருந்து வந்தன. பெண்களின் அதிகாரம் சிறிது சிறிதாக ஆடவரின் கைக்கு மாறியபோது பெண்களைக் கட்டுப்படுத்து வனவும், கட்டி ஆள்வனமாகிய சமூகக் கட்டுப்பாடுகளை ஆடவர் உண்டு பண்ணினர். இதனால் ஆடவர் ஆளவும் பெண்கள் ஆளப்படவும் பிறந் தார்கள் என்னும் தவறான கருத்து மக்கட் சமூகங்களிடையே தோன்றி வலுவடைந்துள்ளது. வரலாற்று முறையில் பெண்களின் பெருமையை உள்ளவாறு எடுத்து விளக்குவதே இந்நூலின் இலக்காகும்.

உயிர்ப் படைப்புக்களும் அவைகளின் தொழில்களும்
இவ்வுலகின்கண் காணப்படும் அசைவுள்ள, அசைவற்ற எல்லா உயிர்ப் பொருள்களையும் நோக்குவோமாயின் அவை, உணவு தேடுதல் சந்ததியைப் பெருக்குதல் என்னும் இரு தொழில்களிலேயே ஒயாது உழன்று வருகின்றன எனத்தோன்றும், சந்ததியைப் பெருக்கும் வன்மை இழந்த உயிர்கள் விரைவில் மடிந்து போகின்றன. இதனால் சந்ததியைப் பெருக்குவது உயிர்களின் முக்கிய நோக்கம் எனத் தெரிகின்றது.

ஆண் பெண் விலங்குகள் சோடிகளாக வாழ்கின்றனவா?
பறவைகளுள் முட்டையிட்டு நீண்டகாலம் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பவைகள் சோடிகளாக வாழ்கின்றன. விலங்குகளின் வாழ்க்கையை நன்கு பயின்றவர்கள் அவை சோடிகளாக வாழாது தனித்தனித் கூட்டங் களாக வாழ்கின்றன என்று கூறுகின்றனர். காட்டில் வாழும் விலங்குகள் பறவைகளுக்குக் கருக்கொள்ளும் உணர்ச்சி (Seasonal rut) ஆண்டின் ஒவ்வோர் காலங்களிலேயே உண்டாகின்றது. *பெண் விலங்குகளும் ஆண் விலங்குகளும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்கின்றன. பெண் ணினங்கள் கருத்தரிக்கும் காலத்தில் மாத்திரம் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளிடையே காணப்படுகின்றன. ஆண் விலங்குகளிடையே பெண் விலங்குகள் காணப்படுவதில்லை. கருத்தரிக்கும் பொருட்டு ஒரு பெண் ஒரு ஆணைத் தெரிந்து எடுப்பது இயற்கைத் தெரிவு (Natural Selection) எனப்படும். எப்பொழுதும் பெண் விலங்கு வீரமுடைய ஒரு விலங்கையே தெரிந்து கொள்ளுகின்றது. ஒரு பெண் மானின் பொருட்டுப் பல ஆண் மான்கள் பல நாளாக ஒன்றோடு ஒன்று முட்டிப் போராடியதையும், அப் போரில் பங்கு பற்றாது தனியே அப்போரைப் பார்த்து நின்ற பெண்மான் இறுதியில் வெற்றியடைந்த அண்மானையே விருப்பத்துடன் தெரிந்து கொண்டதையும் பற்றி டார்வின் என்னும் இயற்கை நூற் புலவர் எடுத்துக் கூறியுள்ளார்.1 ஆண் பெண் சேர்க்கைக்குப் பின்னால் ஆண் விலங்குகள் தம் கூட்டத்தை அடைந்து வாழும். இயற்கைத் தெரிவு ஆண்களாலன்று பெண்களாலேயே தெரியப்படுகின்றது.2

கூட்டத்துக்குப்பின் பெண் விலங்குகள் ஆண் விலங்குகளை உடன் வாழ
அனுமதிப்பதில்லை

“ஆண் பெண் கூட்டத்துக்குப்பின் இரு இனத்துக்கும் ஒருவகை வெறுப்பு உண்டாகின்றது.3 குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளிடையே இவ்வெறுப்பு மிகக் காணப்படுகின்றது. அமெரிக்க துருவ மான்கள் (Rein deer) ஒரிடத்தினின்றும் இன்னோரிடத்தில் தங்கி வாழும் பொருட்டுச் செல்லும்போது ஆண்களும் பெண்களும் தனித்தனிக் கூட்டங்களாகச் செல்லும். எல்லா இனமான்களிடையும் இவ்வியல்பைக் காணலாம். புரட்டாசி மாதத்துக்குப்பின் எருமைகளுள் ஆண் பெண் இனங்கள் தனித்தனி பிரிந்து வாழ்கின்றன. ஆண் பெண் சேர்க்கைக்குப்பின் பெண் வெளவால் ஆண் வெளவாலைக் கடித்துத் துரத்திவிடுகின்றது. பெண் வெளவால்களின் மத்தியில் ஆண் வெளவால்கள் காணப்படுவதில்லை. கருக்கொண்டபின் பெண் யானைகள் ஆண் யானைகளைத் துரத்தி விடு கின்றன. பெண் யானைக் கூட்டத்துள் ஆண் யானையைக் காண்டல் அரிது. பருவம் அடையும் வரையும் மாத்திரம் ஆண் யானைக் கன்றுகள்தாய் யானைகளுடன் தங்கும்; பெண் நீர்நாய்கள் கருக்கொள்ளும் காலத்துக்குப் பின் ஆண்களும் பெண்களும் பிரிந்து தனித்தனிக் கூட்டங்களாகவாழும். அணில்களும் இவ்வாறே பிரிந்து வாழ்கின்றன. குரங்குகளைப் பற்றியும் இவ்வாறு சொல்லப் படுகின்றது. ‘ஒரான் ஊத்தான்’ என்னும் குரங்குகள் ஆணும் பெண்ணும் கலந்த கூட்டமாக வாழ்வதில்லை. ஆண்கள் ஒரு தனிக் கூட்டமாகவும், பெண்களும் குழந்தைகளும் மற்றொரு கூட்டமாக வும், கொரிலாக் குரங்குகள் வாழும்.” - தாய்மார். (The mothers).

ஆடவரும் மகளிரும் தனித்தனிக் கூட்டங்களாக வாழ்ந்தார்கள்
விலங்கு நூல் முறையில் மனிதன் விலங்கினத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவனும் ஒரு காலத்தில் விலங்குகளை ஒப்பவே வாழ்ந்தான் என்று கூறுதல் பிழையாகாது. ஆண்களும் பெண்களும் தனித்தனிக் கூட்டங்களாக வாழ்ந்தார்கள் என்பதற்குரிய சில வழக்கங்கள் இன்றும் காணப்படுகின்றன. மக்களிடையே இயற்கைத் தெரிவு பெண்களாலேயே செய்யப்பட்டது.4 மகளிரும் ஆடவரும் கலந்து வாழாது தனித்தனிக் கூட்டத்தினர்களாகவே நீண்டகாலம் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் மேற்கூறப்படும் பொருளில் ஆங்காங்கு வருகின்றன. ஆகவே அவைகளை இவ்விடத்தில் விரித்து எழுதிற்றிலேம்.

”அமேசன்” என்னும் பெண் போர் வீரியர்
முற்காலத்தில் இராணியால் ஆளப்பட்ட பெண் இராச்சியம் ஒன்று உலகின் சில பகுதிகளில் இருந்ததென்னும் மேல்நாட்டுப் பழங்கதை ஒன்று உள்ளது. பெண்கள் ஆடவரின் கலப்பின்றித் தனித்து வாழ்ந்தார்கள்; அவர்கள் ஆடவர்களைப்போலப் போர் செய்யவும் வேட்டையாடவும் பழகியிருந்தார்கள். ஆண்டின் ஓரு முறையோ இரு முறையோ ஆடவர் பெண்களைச் சந்திக்கும்படி அனுமதிக்கப்பட்டார்கள். சில நாட்களின் பின் அவர்கள் பிரிந்து தமது கூட்டத்தைச் சேர்ந்துவிடுதல் கட்டாயமாக விருந்தது அமேசன் எனப்பட்ட பெண்கள் அவர்களால் உண்டாக்கப்பட்ட சட்டத்திட்டங்களைக்கொண்டு அரசியரால் ஆளப்பட்டார்கள். தயதோரஸ் (Diodorus) ஸ்ராபோ (Strabo) முதலிய வரலாற்று ஆசிரியர்கள் அமேசன் என்னும் பெண் இராச்சியம் காக்கேசிய மலைகளுக்கும் யுக்சின் (Euxine) கரைகளுக்கும் இடையில் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் வில்லை நன்றாக இழுத்து வளைக்கும் வாய்ப்புப் பெறுவதற்காக வலது தனத்தை வெட்டி எடுத்திருந்தார்கள்.

போர்ப் பிரியமுள்ள இக் கூட்டத்தினர் பிர்கிய (Phrygia) என்னும் நாட்டின்மீது படை எடுத்தார்கள். உரோசருக்கு (Trojans) உதவியாகப் போர் செய்யும் பொருட்டுப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற அமேசன் இராணி அச்சில்லீஸ் என்பவனாற் கொல்லப்பட்டாள்.

காக்கேசஸ் மலையிடத்திலே கணவரைச் சந்திப்பதால் பிறக்கும் பிள்ளைகள் பெண்களாயின் அவர்கள் அவைகளைத் தாமே வளர்த்தார்கள், ஆண்கள் ஆயின் கொன்றார்கள்; அல்லது ஆடவரிடம் அனுப்பி வைத் தார்கள்.5

தமிழ்நாட்டில் வழங்கும் ஆரவல்லி சூரவல்லி கதை, அல்லி அரசாணி கதை, பவளக்கொடி கதைகள் தமிழ்நாட்டு அமேசன் கதைகளே யாகும்.
காமம் என்பது யாது?

இவ்வுலகப் படைப்புக்கள் எல்லாம் ஆண் பெண் என்னும் இரு வகைகளாக அ
மைந்துள்ளன. இவ்விரு இனங்களின் ஆண் பெண் சேர்க்கையால் உலகில் அவைகளை ஒத்த சந்ததிகள் தோன்றிப் பெருகு கின்றன. சந்ததி பெருகுவதற்கு ஆண் பெண் சேர்க்கை அவசியம் வேண் டப்படுகின்றது. இயற்கையாகவே எல்லா உயிர்களிடத்தும் தம்மைப் போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் இயற்கை உணர்ச்சி பதிந்து உள்ளது. தம்மைப்போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் பருவம் எய்திய ஆண் இனங்களும் பெண்ணினங்களும் எதிர்ப்படும்போது உள்ளே மறைந்திருந்த உணர்ச்சி கிளர்ந்து எழுந்து வெறிபோல் வெளிப்படுகின்றது. இவ்வாறு கிளர்ந்தெழும் வெறியே காமம் எனப்படுகின்றது.

ஆண் பெண் சேர்க்கைக் காலங்களில் ஊன் உணவு கொள்ளும் விலங்குகள் ஒன்றை ஒன்று பற்களாற் கடித்தும் நகங்களாற் கிழித்தும் உடம் பில் காயங்களை உண்டு பண்ணுகின்றன. வீடுகளிலே பூனைகள் இவ்வாறு செய்வதை நாம் பார்க்கின்றோம். சிங்கங்களும் புலிகளும் ஆண் பெண் சேர்க்கைக் காலங்களில் காட்டில் வாழும் உயிர்கள் எல்லாம் நடுங்கும்படி முழக்கஞ் செய்கின்றன. விலங்குகளிடத்திற் காணப்படும். இவ் வகை இயல்புகள் மக்களிடையும் இருந்து சிறிது சிறிதாகப் பண்பட்டுள்ளன. இன்ப நூல்களிற் கூறப்படும் பற்குறி நகக்குறி என்பன ஆண் பெண் சேர்க்கைக் காலத்துத் தோன்றும் வெறியினாற் கடிக்கும் பற்றழும்புகளும், நகங்கள் கீறும் நகத்தழும்புகளுமேயாகும். முத்தம் என்பதும் காம உணர்ச்சியாற் கடிக்கும் கடியின் பண்பாடேயாகும்.6 ஆண் பெண் சேர்க்கைக்குப்பின் ஒருவரில் ஒருவர் பற்று இன்றிப் போகும் காதல் வெறியைக் காமம் எனக் கூறுதல் அமையும்.6

காதல்
காமத்தின் பண்பாடே காதல் எனப்படும். காதல் உணர்ச்சி ஆண் பெண் என்னும் இருபாலாரையும் அவர்களின் இளமை கழிந்த காலத்தும் இணைத்தும் வைப்பதாகிய உயர்ந்த பண்பு.

தாய், பிள்ளைகளைப் பெறுகின்றனர்; பெற்ற பிள்ளைகள் மீது அன்பு கொள்கின்றாள். இவ்வாறு தோன்றும் அன்பு தலைமுறை தலைமுறையாக வளர்ச்சியடைகின்றது. இவ்வகை இளகிய உள்ளமுள்ள பெண் இயற்கைத் தெரிவு செய்யும்போது தான் தெரிந்தெடுத்த ஆடவன்மீது கசிந்த உள்ளமும் அன்புகலந்த உணர்ச்சியுமுடையவளாகின்றாள். ஆண் பெண் சேர்க்கைக் குப் பின்பும் அவ்வுணர்ச்சி அவளை விட்டுப்பிரியாமல் இருக்கின்றது. இப் பண்பட்ட உள்ளப்பிணைப்பே காதல் எனப்படுகின்றது. காதல் உணர்ச்சி பெண்களிடத்திலேயே முதலிற்றோன்றி வளர்ச்சியடைவதாயிற்று.*

தாய் ஆட்சி
தாய் வட்டங்கள்
நாம் எல்லோரும் தேன் கூட்டில் ஈக்கள் எப்படி வாழ்கின்றன என்று அறிவோம். தேன் கூட்டின் மத்தியில் இராணி, அல்லது தாய் ஈ இருக் கின்றது. அதனைச் சூழ்ந்த அதன் பிள்ளைகளாகிய மற்றைய ஈக்கள் இருக் கின்றன. இதனை ஒரு தாய் வட்டம் எனக் கூறலாம். இதனை ஒப்பவே மக்களும் தாய் வட்டங்களாகப் பெருகுகிறார்கள். பிள்ளைகளுள் ஆண்கள் வேட்டையாடு வோராக அலைந்து திரிந்தனர். பெண்கள் ஒரிடத்தில் தங்கி வாழ்ந்தனர். வயதின் மூத்த தாயே குடும்பத்தின் தலைவியாக விருந்தாள். அவள் சொல்லுக்கு எல்லாரும் அடங்கி நடந்தார்கள். தாய்க்கு அடுத்தபடி யில் அவளின் மூத்த குமாரி அதிகாரமுடையவளானாள்.

பெண்கள் ஒரிடத்திற் கூட்டமாக வாழ்ந்தமையின் அவர்கள் வாழும் இடங்களிலேயே உணவைப்பெற வேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் தாம் வாழும் இடத்திலும் அதன் அண்மையிலும் பழ மரங்களையும் தானி யங்களையும் பயிரிட்டுத் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற்றனர்.7

உணவின் பொருட்டு ஓய்வின்றி அலைந்து திரியும் நிலையில் மக்களின் நாகரிகம் உதயமாகவில்லை. உணவு எளிதிற் கிடைத்தபோது அவர்கள் ஆறுதல் அடைந்து அமைதியாக வாழத் தொடங்கினார்கள்; வாழ்க்கைக்குத் தேவைப்படும் சட்டி, பானை, பெட்டி, கடகம், பயிர்த் தொழிலுக்கு வேண்டும் ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். அதனால் சிறிது சிறிதாகக் கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. அலைந்து திரி யாது ஒரிடத்தில் தங்கி வாழ்ந்தவர்களாகிய பெண்களே கைத் தொழிலையும் பயிர்த்தொழிலையும் வளர்த்தவர்களாவர். ஏர் பூட்டி நிலத்தை உழும் காலம் வரையில் ஆடவர் பெரிதும் வேட்டையாடும் நிலையிலேயே இருந்தார்கள். ஆடவர் சில சமயங்களில் பெண்களையே உணவின் பொருட்டு எதிர் பார்க்க வேண்டியிருந்தது. பெண்கள் ஆடவரிலும் கண்ணிய முடையவர் களாகக் கருதப்பட்டார்கள். ஆடவர் பெண்களுக்குப் பணிந்து ஒழுகினர். உணவுப் பொருளே மக்களின் செல்வமாகக் கருதப்பட்டது. பெண்களிடத்தி லேயே அதிக உணவு இருந்தது.

ஒரே தாய் வட்டத்துள் திருமணக் கலப்பு இல்லை நுஒடிபயஅல
ஒரு தாய் வழியாகப் பெருகியவர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உடன்பிறப்பு முறையினராகக் கருதப்பட்டார்கள். ஆகவே ஒரு தாய் வட்டத்திலுள்ள ஆடவரும் மகளிரும் திருமணக் கலப்புடையவராய்ப் பிள்ளைகளைப் பெறுதல் கடியப்பட்டது. ஒரு தாய் வட்டத்தேயுள்ள பெண் பருவமடைந்தபோது இன்னொரு தாய் வட்டத்திலுள்ள ஆடவனைச் சேர்ந்து பிள்ளைகளை ஈன்றாள். பெண்ணின் கணவன் தனது தாய் வட்டத்தில் சென்று வாழ்ந்தான். பெண்ணின் தாய் வட்டத்தில் அவன் தங்கவில்லை. தாய் பெறும் குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமாக விருந்தன. பிள்ளைகள் தந்தையரை அறியார். ஆகவே பிள்ளைகள் தாய் வழியில் அறியப்பட்டனர். தந்தைக்கும் பிள்ளைக்கும் எவ்வகைத் தொடர்பும் உண்டாகவில்லை. பெண்ணுக்கும் ஆடவனுக்கும் கணவன் மனைவி என்னும் கடமைகளும் தோன்றவில்லை.8

பெண்கள் பல தார மணம்
இயற்கைத் தெரிவு ஆண்களுக்கன்று பெண்களுக்கே உரியது என முன்னோரிடத்திற் படித்தோம். பருவமடைந்த பெண்கள் சந்ததி விருத்தி யின் பொருட்டுத் தகுதியுள்ள ஆடவரைத் தெரிந்தெடுத்தனர். இவ் வழக்கி லிருந்து பெண்கள் தாம் விரும்பிய பலரைக் கணவராகத் தெரிந்தெடுக்கும் வழக்கு வளர்ச்சியடைந்தது. அவர்கள் பெண்ணினால் வரையறுக்கப்பட்ட முறைப்படி அவளை அடைந்தார்கள். இவ்வுலகம் முழுமையிலும் இவ் வகை மணங்களே நடைபெற்றன;9 இன்றும் சிற்சில நாடுகளில் காணப்படு கின்றன. இவ்வகை மணங்கள் நடைபெற்ற காலத்தில் வியபிசாரமென்பது பொருளற்றதாயிருந்தது. தந்தை ஆட்சிக் காலத்திலேயே வியபிசாரம் என்னும் குற்றச்சாட்டை உணர்த்தும் சொல் உண்டாயிற்று.10

நாயர் சாதியினரும் அவரின் திருமணங்களும்
மலையாளத்தில் நாயர் என்னும் ஒரு வகுப்பினர் காணப்படுகின் றனர். இவர்களின் மணமுறை பழைய தாய் வட்ட மணமுறையை ஒத்தது. நாயர்க் குடும்பங்கள் தாய் வட்டங்களாகவுள்ளன. ஒவ்வொரு குடும்பத் துக்கும் தாயே தலைவியாவள். அவர்களுக்குள் நிலையான திருமணங்கள் இல்லை, நாயர்களும் நம்பூதிரிகளும் பெண்ணின் சகோதரனது விருப் பத்தைப் பெற்றுப் பெண்ணைச் சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள். சம்மந்த மென்பது சிலகாலத்துக்கு மாத்திரம் இருபாலாரும் கணவன் மனைவியராக இருக்கும் உடன்படிக்கை. எப்பொழுது இருவரில் எவருக்கும் இக்கூட்டுறவு பிடிக்கவில்லையோ அப்பொழுதே அவர்கள் அதனை வெட்டிவிடுவர். பின்பு அவர்கள் தமக்கு விருப்பம்போல் வேறு வேறு சம்பந்தங்களை வைத்துக்கொள்ளலாம். தந்தையின் சொத்தில், பிள்ளைகளுக்கு யாதும் உரிமை இல்லை. பிள்ளைகள் தாய்வட்டத்தைச் சேர்ந்தனவாகும். தாய் வட்டத்துக்குரிய சொத்திலேயே அவைகளின் வாழ்க்கைச் செலவு நடை பெறுகின்றது. தாயின் உடன் பிறந்தானுக்கே பிள்ளைகளைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. அவனுடைய சொத்து அவனுடைய பிள்ளைகளைச் சேராது மருமக்களையே சேர்கின்றது.

பல ஆடவரை ஒரே காலத்தில் கணவராகக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம் நாயர்ப்
பெண்களிடத்தில் உண்டு. இதனை அவர்கள் சமூகம் தவறானதென்று உணர்வதில்லை. தந்தையின் சொத்து பிள்ளைகளை அடையாமல் மருமக்களை அடையும் வழக்கு மருமக்கள் தாயம் எனப் படும். திருவிதாங்கூர் அரசுரிமையும் இவ்வகையினதே. இராணி எனப்படுப வர் அரசனின் மனைவியல்லள், அவனது உடன் பிறந்தாளே, அரசுரிமை அவளுடையதே அரசியின் மூத்த பெண்ணுக்கே அரசுரிமை செல்கின்றது.

நாயர்ப் பெண்கள் பன்னிரண்டு கணவர்வரையில் உடையவர்களா யிருந்தார்கள் என்பதற்கு எழுத்து வகையான அதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கணவனும் மனைவியால் வகுக்கப்பட்ட முறைப்படி ஒவ்வோர் நாளில் அவளை அடைவான். பெரும்பாலும் அக்கால எல்லை ஒரு நாள் மத்தியானம் முதல் அடுத்தநாள் மத்தியானம் வரையுமாக விருந்தது. இவ் வகை வழக்கு இந்தியாவில் மாத்திரமன்று உலகம் முழுமையிலும் இருந்து வந்தது.11

தாய்க் கடவுள்
தாயே எல்லா அதிகாரமுமுடையவளாயிருந்தாள். அக் காலத்தே மக்கள் எல்லா அதிகாரமுமுடைய தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில் முதன்முதல் தாய் வழிபாடே உண்டாயிற்று என மக்கள் நூலார் ஆராய்ந்து கூறுகின்றனர். எல்லா அதிகாரமுமுடைய தாய்க்கு விலங்குகளுக்குள் வீர முடைய சிங்கம் வாகனமாக்கப்பட்டது. அவளே வீரத்தெய்வம் (கொற்றவை) ஆகவும் விளங்கினாள். உலகில் எல்லாப் பாகங்களிலும் தாய்க் கடவுள் கன்னித் தெய்வமாகவே கொண்டு வழிபடப்பட்டாள். முற்காலத் தாய் பிள்ளைகளைப் பெற்றபோதும் கலியாணமாகாதவள் என்றே கொள்ளப் பட்டாள். கலியாணம் என்பது கணவன் மனைவி என்னும் முறையில் ஒருமித்து வாழுதல். தாய்க் கடவுள் கன்னி எனப்படுதல் ஆதிகாலத் திருமண முறையை ஒருவாறு விளக்குவதாகும்.12

விலங்குக் கூட்டங்களைத் தலைமை தாங்கிக் காப்பது பெண்ணே
காடுகளிலே விலங்குகள் கூட்டங்களாக வாழ்கின்றன. ஆபத்து நேரும்போது முன்னேவந்து அவைகளைக் காப்பது மூத்த பெண் விலங்கே யாகும்.13 இதுவே இயற்கை விதிபோலும். மக்களுள்ளும் மூத்த பெண்ணே தலைவியாயிருந்தாள் என்று முன் படித்தோம். பெண்கள் ஆடவரிலும் பார்க்கச் சிறந்த போர் வீரியராயிருந்தார்களென்று நாம் வரலாறுகளிற் படிக்கின்றோம்.

போர்வீரப் பெண்கள்
“கனெரியிலுள்ள குவாஞ்செஸ் (Guanches) பெண்கள் அணிகளில் நின்று போர் செய்தனர். மொரக்கோவிலுள்ள பெர்பர் (Berber) பெண்கள் குதிரைகள்மீது ஏறிச் சவாரிசெய்து போர் புரிவர். அராபியரின் வரலாற்றில் பெண் போர் வீரர்களைப்பற்றிய செய்திகள் பெரிதும் காணப்படுகின்றன. பெண் போர்வீரர்கள் பலதடவைகளில் போர் முனையிற்றோன்றி போர்ப் போக்கை மாற்றித் தமது உடன் பிறந்தார், கணவர், பிரதானிகளின் உயிர் களைக் காத்திருக்கின்றனர். வகாபியின் (Wahabi) மனைவியாகிய காலியா என்பவள் மகமத்அலி என்பவனைப் போர் முனையில் பலதடவை எதிர்த்தாள். வான்ரி (Fanti) மக்களுள் பெண்களும் ஆடவருடன் பக்கத்தே நின்று போர் புரிந்தனர். சான்சிபார் சுல்தானிடத்தில் 1000 பெண் போர் வீரர் நிலையாக இருந்தனர். மத்திய ஆசிய, தாத்தாரியப் பெண்கள் மிகவும் வீரமுடையவர்களாக விளங்கினார்கள். அவர்கள் ஆடவரிலும் பார்க்க வேகமாகக் குதிரைகளைச் செலுத்திப் போர் செய்தார்கள். சீயம் (Siam) அரசன் பெண் காவலாளரை அமர்த்தியிருத்தல் வழக்கு. கண்டி அரசனும் இவ்வாறு விற்பிடித்த பெண் காவலரை வைத்திருந்தான். பாரசீக அரசன் ‘அமேசன்’ மெய்க்காப்பாளரை அமர்த்தியிருந்தான். சீத்திய (Seythian) பெண்கள் ஆடவரை ஒப்பப் போர் புரிகின்றார்கள் எனக் கொதோதசு கூறியுள்ளார். கெல்திய (Celt) பெண்கள் ஆடவரின் இடை இடையே நின்று போர் புரிந்தனர். அயர்லாந்தின் இலக்கியங்கள் பெண்வீரர் பலரைப்பற்றிக் கூறுகின்றன.”14

பெண்கள் ஆடவரை ஒப்ப அல்லது அவர்களிலும் திறமையாகப் போர்செய்யும் திறன் அடைந்திருந்தார்கள். தந்தை ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்டார்கள். பல தலைமுறை களாக அவர்களின் வீரம் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால் வீரம் குன்றி மறைந்துவிட்டது. இன்று பயம் அல்லது கோழைத்தனத்துக்குப் பெண்கள் எடுத்துக்காட்டப்படுகின்றனர்.

பழைய எகிப்து மேற்கு ஆசிய நாடுகளிற் சொத்துரிமை
பழைய15 எகிப்தில் ஆவணங்களில் (Documents) கணவனின் பெயர் காணப்படவில்லை. பில்லோமீற்றர் (Philometer) என்னும் அரசன் கணவனின் உரிமையையும் புகுத்துதற்கு மனைவி எழுதும் ஆவணங் களுக்குக் கணவனும் கையெழுத்திடல் வேண்டும் என்னும் சட்டத்தை உண்டுபண்ணினான்.

“சகாரா வனாந்தரங்களிலுள்ள டௌரெக் (Touareg) பெண்கள் தாய் வழி உரிமையையே பெற்றிருந்தனர். பாபிலோனிய மகளிரும் எகிப்திய பெண்களைப்போலவே தாயாட்சி உடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் தம் உடன்பிறந்த ஆடவரைப் போலவும் கணவரைப்போலவும் எல்லாவற் றிலும் சம உரிமை பெற்றிருந்தனர்.” கிரேத்தா (Crete) மக்கள் கிரேத்தாவை தாய்நாடென்றே கூறினர்; தந்தை நாடென்றும் கூறவில்லை எனப் புளுற்றாக் (Plutarch) என்னும் வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். பழைய அதேன்சில் பிள்ளைகள் தாய்வழியால் அறியப்பட்டார்கள். கிகுரொப்ஸ் (Cecrops) அரசன் காலத்தில் இவ்வகை வழக்கு இருந்தது. இலைசியாவில் தாயாட்சியே இருந்த தென ஹெரதேதசு கூறியுள்ளார். கிரேத்திய (Crete) பெண்களுக்கு எகிப்திய பெண்களைவிட அதிக அதிகாரம் இருந்தது. காசிஸ் (Khasis) என்னும் இடத்தில் ஆண் கடவுளரின் முன்னர் பெண் கடவுளர் வைக்கப் பட்டிருக்கின்றனர். கிரேக்கர் வழிபட்ட எட்டு முக்கிய கடவுளரில் ஐவர் பெண்பாலினர். ஸ்பெயினில் தாய் தந்தை என்னும் இருவரின் பெயர் களையும் இணைத்துப் பிள்ளைகளுக்குப் பெயர் இடப்பட்டது.16

பழைய மெசபெத்தேமியாவில் பெண்கள் ஆடவரை ஒத்த உரிமை பெற்று விளங்கினர். மணமான பெண்களுக்கும் மணமாகாத பெண்களுக் கும் சொத்துரிமை இருந்தது பெண்கள் தாம் விரும்பிய வண்ணம் (கணவ னின் உடன்பாடின்றி) பணம் கொடுத்தல் வாங்கல் சம்பந்தமான கருமங் களைச் செய்தார்கள். பெண்கள் வாணிகமும் புரிந்தனர்; தேசாதிபதிகள், எழுத்தாளர்களாகக் கடமை ஆற்றினர்; ஆலயங்களில் பூசாரிகளாக (Priestess) விருந்தனர். அவர்களுக்குப் பெருஞ்செல்வாக்கும் பொருளும் இருந் தன. எகிப்திய பெண்கள் தாய் தந்தையரைப் பராமரிக்கக் கடமைப்பட்டிருந் தனர். அவர்கள் ஆடவரை ஒப்ப எல்லாத் தொழில்களும் புரிந்தனர்; பயிரிடுந் தொழிலிற் பலர் ஈடுபட்டிருந்தார்கள். நான்காவது அல்லது ஐந்தாவது எகிப்திய பரம்பரைக்காலத்தில் எழுதப்பட்ட ஓவியம் ஒன்றில் பெண் ஒருத்தி கப்பல் ஒட்டுகின்றாள்.17 மக்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் தொடங்கிய தாயாட்சி, காலத்தில் சிறிது சிறிதாக மாறுதலடைந்து இறுதியில் தந்தை ஆட்சியுட் புகுந்து மறைந்துவிட்டதென வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.18

ஆண்களைச் சீர்திருத்தினவர்கள் பெண்களே
இவ்வுலகில் வாழும் எல்லா ஆண் பெண் உயிர்களுள் ஆண்கள் வலிய தன்மையுடையனவாகவும், பெண்கள் மென்மைத் தன்மையுடையன வாகவும் காணப்படுகின்றன. ஆண்கள் மூர்க்க குணமும், முரட்டுத்தன்மை யும் போர் விருப்பம் உடையர். ஆண்களிடத்தில் ஆக்கும் குணங்களினும் பார்க்க அழிக்கும் குணங்களே பெரிதும் காணப்படுகின்றன. பெண் களிடத்து இயல்பாக மென்மைக் குணங்களுண்டு. அவை பிள்ளைகளைப் பெற்று அவைகளைக் கருத்துடன் பாதுகாக்கும் இயல்பினால் அன்பு தோன்றி மென்மையக் குணங்களோடு வளர்ச்சியடைகின்றது அவ் வன்புக் குணங்கள், அவ் வுயிர்கள் பெறும் குழந்தைகளிடத்தும் தலைமுறை தலை முறையாகச் சுவறி வளர்ச்சியடைகின்றன. இம் முறையினாலேயே போர்க் குணமும் முரட்டுச் சுபாவமுமுடையவர்களாயிருந்த ஆடவர் நீண்ட காலத் தில் சிறிது சிறிதாக சாந்தகுணமுடையவர்களாக மாறியுள்ளார்கள் என ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர்.19

பெண்கள் பொதுவில் இளகிய மனமும் இரக்கமும், ஆடவரிடத்தில் உருக்கமுடையவர்களாகவும் இருக்கின்றனர் அவர்கள் பறவைகள் விலங்குகள் முதலிய எல்லாச் சிற்றுயிர்களிடத்திலும் இவ்வியல்பினர்; தாவரங்கள் பூக்கள், பிற அஃறிணைப் பொருள்கள், தாம் வைத்துப் பயன்படுத்தும் பொருள் முதலியவைகளை மென்மையாகவே எடுத்துக் கையாளுவர். ஆடவரோ அவைகளை முரட்டுத்தனமாகப் பயன்படுத்தி ஒடித்து விடுவர் - தாய்மார்.

முற்பட்ட சமூகத்தில் தாயே முதன்மை இடத்தைப் பெற்றிருந்தாள். தாய்க் கடவுளைப்பற்றி வரும் பழங்கதைகளாலும், பயிர்த்தொழிலை விருத்திசெய்து வீட்டு வாழ்க்கையையும் நாகரிகத்தையும் வளர்த்தமை யாலும், பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்துச் சமூகத்துக்குப் புத்திமதி கூறும் தன்மையினாலும் தாய்மிக முக்கியம் வாய்ந்தவள். அமெரிக்க சிவப்பிந்தி யர்களுக்குத் தாயே ஆலோசனை கூறுவாள். இந்தியாவின் தென்மேற்குக் கரையில் வாழும் நாயர் சாதியினருள் தாயே முதன்மை இடத்தை வகிக் கின்றாள். உலகின் பழைய நாகரிக வரலாறுகளையும் சமய வரலாறுகளை யும் பயிலுமிடத்துத் தாயே முக்கிய முடையவாளாக விருந்தாளென்னும் உண்மை நன்கு புலனாகின்றது - உயிர் வரலாற்றின் காட்சி.

தாயாட்சியும் சொத்துரிமையும்
தாய் ஆட்சி குடும்ப ஆட்சியாகவே இருந்துவந்தது. தனிப்பட்டவர் களுக்குச் சொத்து இருக்கவில்லை. குடும்பச் சொத்து எல்லோருக்கும் பொதுவில் இருந்தது. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாகத் தேடும் சொத்தும் குடும்பத்தைச் சேர்ந்ததாகவே கொள்ளப்பட்டது. பெரும்பாலும் சொத்துக்கள் நிலம்போன்ற அசைவற்ற பொருள்களாகவிருந்தன அவை பெண்களுக்கே உரியன. வில், அம்பு போன்ற சில அசைவுடைப் பொருள்களே ஆடவருக்குரியனவாயிருந்தன. அவர்கள் இறந்தபோது அவை அவர்களுக்கு அடுத்த உலகில் பயன்படும் பொருட்டுச் சமாதிகளுள் வைக்கப்பட்டன.

தாயாட்சியின் வீழ்ச்சியும் தந்தை ஆட்சியின் தொடக்கமும்
தொடக்கத்தில் பெண்களே சொத்துக்குரியவர்களா யிருந்தார்கள். பெண்களை மணந்துகொள்வதால் மாத்திரம் ஆடவர் சொத்தைப் பெறக்கூடியவர்களானார்கள். பயிரிடுதல் கைத்தொழில்போன்றவை, நீண்டகாலம் பெண்கள் கையிலேயே இருந்தன. ஆடவர் இத் தொழில்களிற் பங்கு பற்றாது அலைந்து திரிவோராகவும் வேட்டையாடுவோராகவும் இருந்தனர். பெண்களின் பயிர்த்தொழிலுக்குரிய கருவிகள் மண்வெட்டி பாரை போன்றவை. அவர்கள் எருதுகளைக் கலப்பையிற் பூட்டி உழ அறிந் திருக்கவில்லை, பின் கலப்பையில் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிக நிலத்தை உழுது பயிரிட்டு அதிக தானியங்களை விளைவிக்கக் கூடியதாகவிருந்தது. ஆடவர் ஏரைப் பிடித்து உழத் தொடங்கினார்கள். அதனால் அதிக உணவு கிடைத்தது. ஆகவே அவர்கள் அலைந்து திரியும் வாழ்க்கையை விட்டு ஓரிடத்தில் தங்குவாராயினர். இதுவரையில் பெண்கள் செய்துவந்த பயிர்த்தொழில் கைத் தொழில் என்பன சிறிது சிறிதாக ஆடவர்கைக்கு மாறின. பெண்கள் வேலை யற்றவர்களாக வீட்டிற்றங்கினார்கள். அவர்களின் பொருள் வருவாய் குன்றிற்று. அவர்கள் தமது வாழ்க்கைக்கு ஆடவர் கையை எதிர்பார்க்கும் நிலைமை உண்டாயிற்று. வெளியிற் சென்று வெய்யிலிற் காய்ந்து வேலை செய்யாமையால் அவர்களின் மேனி சிறிது சிறிதாக அழகுபெற்றது. மேனி மினுக்குப் பொருள்களாலும், அழகிய ஆடைகளாலும் அவர்கள் தம்மை அலங்கரித்தனர். அவர்களின் அழகு ஆடவரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவர்கள் அழகின் மிக்க பெண்களைத் தமக்கே உரிமை யாக்கிக் கொண்டு வாழ விரும்பினார்கள். ஒருவன், தான் சொந்தமாக்கிய பெண்ணோடு இன்னொருவன், நட்புக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. ஆகவே அவள் மற்றவர்களுடன் அளவளாவி நட்புக்கொள்ளாதபடி அவளை வீட்டில் இருக்கும்படி செய்தான். இது வரையில் வெளியிற் சென்று பெண்கள் சேகரித்துவந்த வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை இவனே சேகரித்து வருவானாயினான். இவ்வகை வாழ்க்கை நாளடைவில் உறுதிப் பட்டது. அப்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தொடர்பு உண்டா யிற்று. பிள்ளைகள் பிறந்தன. அப்பொழுது ஆடவன் தனது சொத்துப் பிள்ளைகளைச் சேர வேண்டுமென்று விரும்பினான். இப்பொழுது தாய் தந்தை என்னும் இருவரின் சொத்தும் பிள்ளைகளைச் சேர்வதாகிய மக்கள் தாயம் உண்டாயிற்று, மருமக்கட்டாயமும் தாயாட்சியும் படிப்படியே மறைந்தன.20

தந்தை ஆட்சியும் இயற்கைத் தெரிவும்
இயற்கைத் தெரிவு பெண்களுக்கே உரியது என்று முன் விளக்கப் பட்டது. இவ்வியற்கை விதி இப்பொழுது மாறத் தொடங்கிற்று. இப்பொழுது ஆடவனே தான் விரும்பிய பெண்ணைத் தெரிந்தெடுக்க ஆரம்பித்தான். இவ்வாறு ஆடவன் பெண்ணைத் தெரிந்தெடுக்கும் முறைகள் பலவாறு வளர்ச்சியடைந்தன. சில மக்கட் கூட்டங்களில் ஒருவன் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் அவன் அவள் தந்தை வீட்டில் ஒரு ஆண்டு வரை யில் தங்கி அவன் செய்துவரும் தொழில்களுக்கு உதவியாகவிருந்தான். பெண்ணின் தந்தை அவனது தொழில் செய்யும் திறமையில் திருப்தியடைந் தால் அவன் தன் புதல்வியை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். சில கூட்டத்தினர் பெண்ணின் தந்தைக்குப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றனர். இவ் வழக்கின் தேய்வே இன்று தமிழ் மக்களிடையே பரியம் என வழங்குவது. இது பெண்ணின் தந்தைக்குத்தான் பெண்ணைக் கொள்ளத் தகுதியுடையவன் என்பதைக் காண்பிப்பதற்கு மணமகன் கொடுக்கும் பொருளாகும். இவ்வழக்கமே பெண்களை மனைவியராக விலைகொடுத்து வாங்கும் வழக்காகவும் மாறியுள்ளது.21

எகிப்தில் தாய் சொத்தும் தந்தை சொத்தும்
பிள்ளைகளைச் சேரும்படி சட்டஞ் செய்யப்பட்ட வகை

பெண்களைப் போலவே ஆடவரும் சொத்து உடையவர்களாயிருந் தார்கள். அக் காலத்தும் சட்டப்படி தாயின் சொத்தே பிள்ளைகளைச் சேர்வ தாயிருந்தது.22 ஒரு பெண்ணை மணக்க விரும்பிய ஆடவன் தன் சொத்து முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை பெண்ணுக்கு எழுதிவைத் தான். தாய் தந்தை என்னும் இருவரின் சொத்தும் பிள்ளைகளைச் சேரும் பொருட்டுச் செய்யப்பட்ட முறை இதுவாகும். இவ்வாறு தாயின் உரிமை யோடு தந்தையின் உரிமையையும் பிள்ளைகள் பெறலானார்கள்.

ஆடவன் பெண்ணின் தந்தையின் கீழிருந்து பணிசெய்தும், பணிக்குப் பதில் பொருள் கொடுத்தும் பெண்ணை மனைவியாகப் பெற்ற காலத்தில் பெரும்பாலும் பெண், சொத்துடையவளாய் இருக்கவில்லை. பெண், சொத்தில்லாதிருந்த காலத்திலேயே ஆடவர் பெண்களை அடிமைப் படுத்தினார்கள்.

இலங்கையின் வட பாகத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஆண் பெண் என்னும் வேறுபாடு இன்றித் தாய் தந்தையின் சொத்துப் பிள்ளைகளைச் சேருகின்றது. ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்திய காலத்தில் தேடிய சொத்தின் நேர்பாதி மனைவியைச் சேர்வதாகும். இவை தாய் உரிமை தந்தை உரிமைகளைப் பிள்ளைகள் அடையும் முறைகளிற் சில பகுதிகளாகும்.

ஒருவன் பல பெண்களை மணத்தல்
ஆடவன் சொத்துடையவனாய் இருந்த காலத்தில் தந்தை ஆட்சி உண்டாயிற்று. தந்தை தாய் என்னும் இருவரும் சொத்துடையராயிருந்த காலத்தில் இருவரும் சமபெருமையுடையவர்களாகக் கருதப்பட்டார்கள். தந்தை ஆட்சி தாயாட்சியைச் சிறிது சிறிதாக விழுங்கி வலிமையடைந்தது. அஞ்ஞான்று பெண்கள் ஆண்களுக்குப்பணிந்து நடக்கும் படியான சட்டங்கள் ஆடவரால் வகுக்கப்பட்டன. தந்தை நிலத்தை உழுது பயிரிடு வதால் செல்வத்தை ஈட்டினான். குடும்பத்தில் எத்தனைபேர் அதிகமாக இருந்தார்களோ அவ்வளவுக்கு அதிக செல்வத்தை ஈட்டக்கூடியதாக விருந் தது. பல பிள்ளைகளையுடையவன் அவர்கள் மூலம் அதிக செல்வத்தை ஈட்டினான். பொருள் ஈட்டும் விருப்புள்ள ஆடவர் பெண்கள் பலரை மணந்து பல பிள்ளைகளைப் பெற்றார்கள்.

இதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் ஒருத்தியின் கணவரின் எண்களைக் கொண்டு அவளின் செல்வத்தையும் அதிகாரத்தையும் அளக்கத்தக்கதாயிருந்தது. இப்பொழுது ஒருத்தனின் மனைவிகளின் எண்களைக் கொண்டு அவன் செல்வத்தையும் அதிகாரத்தையும் அறியத்தக்கதாயிருந்தது.

ஆடவர் மகளிர் என்னும் இரு பாலாரிலும் உயர்ந்தவர் யார்?
ஆண் பெண் என்னும் இரு பாலாரிலும் உயர்வாகக் கொள்ளத் தகுந்தவர் யார் என்னும் கேள்வி கேட்கப்படுகின்றது. அறிவாற் சிறந்த ஒளவையாரே “அன்னையும் பிதாவும்” என அன்னையை முன்னால் வைத்துக் கூறியிருத்தல் காண்க. பெண்ணின் கருப்பை, வயல்போன்றது. ஆடவன் அதிலே வித்தை வித்துபவன் போல்வனாகின்றான். நிலமின்றி வித்து முளைத்து ஓங்குமாறில்லை. வித்தின்றி வயலில் முளை தோற்றுமா றில்லை. இம் முறையைக் கொண்டு ஆண் பெண்களின் உயர்வு தாழ்வுகளை முடிவு செய்ய முடியாது. இருபாலாரும் தத்தமக்கு இயற்கையால் அளிக்கப் பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் தனித்தனி பெருமையுடையவர் களாக விருக்கின்றனர்.

இவ் வுலகத்திலே ஆதியில் சத்தி (தாய்க் கடவுள்) வணக்கம், தாய் உயிர்களைத் தோற்றுவிக்கின்றாள் என்னும் பெருமைப்பற்றி எழுந்து நடைபெறுவதாயிற்று. இதனால் படைப்பு முறையில் ஆண்களிலும் பார்க்கப் பெண்களே சிறந்தவர்கள் என ஆதிமக்கள் கருதினார்கள் எனத் தெரிகின் றது. பண்டை நாளில் தமிழர் தாய், தந்தை என்னும் இருவரும் சமஉரிமை யினர் என்றே கருதி வந்தார்கள். இவ்வுண்மையினை அவர்களின் சமய நூலாகிய ஆகமங்களிற் காணலாகும்.*

மந்தை மேய்க்கும் மக்களுள் பெண்களின் நிலைமை
மந்தை மேய்க்கும் மக்களுள் ஆடவரே சொத்துக் குடையவர்களா யிருந்தார்கள்; ஆகவே அவர்களிடையே தந்தை ஆட்சி வளர்ச்சி யடைந்தது. இவர்கள் வெளியிற் சென்று மந்தை மேய்ப்பவர்களாதலின் தம் மனைவியர் பிறருடன் நட்புக் கொள்வதையோ, அல்லது நட்புக்கொண்டு தம்மை விட்டுப் பிரிந்து விடுவதையோ நினைந்து அஞ்சினார்கள். ஆகவே அவர்கள் பெண்கள் பிற ஆடவரை நோக்காதிருக்கும்படி அவர்களை வீடு அல்லது கூடாரங்களின் உபுறங்களில் வைத்திருத்தல், அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தி வைத்திருத்தல் போன்ற முறைகளைக் கையாளுவாரா யினர். தொடக்கத்தில் மந்தை மேய்க்கும் நிலையில் இருந்தவர்களாகிய ஆரியர் இந்திய நாட்டில் வந்து குடியேறியபோது அவர்களின் பெண்கள் இவ்வாறு ஒடுக்கப்பட்டிருந்தாhக்கள் என்பது அபஸ்தம்பம் போதாயனம் முதலிய அவர்களின் பழைய நீதி நூல்களால் நன்கு விளங்குகின்றது. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு வேதம் மறைக்கப் பட்டிருப்பதும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.23

தந்தை ஆட்சிக்காலத்தில பெண்கள் ஆடுமாடுகள் போன்ற ஆடவனின் உடைமைகளானார்கள்
தந்தை ஆட்சிக்காலத்தில் பெண்கள் சொத்தில்லாதவர்களாயி னார்கள் . ஆடவன் தனது மனைவி மக்களை ஆடு மாடுகள் போன்று விற்க வும் வாங்கவும் கூடிய அசைவுடைப் பொருள்களாகப் பெற்றிருந்தான்.24 அவ்வாறு விற்கவோ வாங்கவோ இரவல் கொடுக்கவோ அவனுக்கு அதிகாரம் இருந்தது. மேற்கு ஆசியாவிலும் கிரேக்க நாட்டிலும் ஒரு வகைச் சட்டம் வழங்கிற்று. ஒருவன் இன்னொருவனின் மனைவியோடு திருட்டுத் தனமாக உறவு வைத்திருந்தால் அவன்மீது வியபிசாரக் குற்றம் சாட்டப்பட வில்லை; திருட்டுக் குற்றம்சாட்டப்பட்டது. ஆகவே அவன் திருட்டுக் குற்றத்துக்குரிய தண்டனை அடைந்தான். வியபிசாரம் குற்றமென்று அவர் களாற் கருதப்படவில்லை.25 வியபிசாரம் செய்தவனுக்குப் பெரும்பாலும் பெண்ணின் கணவனுக்கு விருப்பமான தண்டனை விதிக்கப்பட்டது.

தந்தை ஆட்சி உண்டானபோதும் தாயாட்சிக்காலத்திருந்த ஒழுக்கங்கள் அரைகுறையாக இருந்துவந்தன
தந்தை ஆட்சி தொடங்கிய போதும் பழைய வழக்கங்கள் திடீரென மறைந்துவிடவில்லை. பல நாடுகளில் கணவனின் உடன்பாட்டுடன் ஒரு பெண் பிற ஆடவரோடு நட்புக் கொண்டிருத்தல் குற்றமாகக் கருதப்பட வில்லை. சில கூட்டத் தினரிடையில் திருமணத்துக்கு முன் நடக்கும் வியபிசாரம் ஒழுக்கக்கேடாகக் கருதப்படவில்லை. இவ்வாறு ஒழுக்கங்கள் மாறுபட்டன.26

மனைவியரை இரவல் கொடுத்தல்
உலகின் பல பாகங்களுக்கிடையில் மனைவியரை இரவல் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. இது பலருக்கு வியப்பைத் தரலாம். கிரேக்கரிடமும் உரோமரிடமும் இவ் வழக்கம் சாதாரண வழக்கில் இருந்தது. கிரேக்கரின் தத்துவ சாத்திரியாகிய சொகிரகிஸ் என்பவரே தனது மனைவி யாகிய சாந்தப்பைபை தனது முதன் மாணாக்கராகிய அல்சிபியாதிஸ் (Alcibiades) என்பவருக்கு இரவல் கொடுத்தார். இவ்வகை வரலாறுகள் கிரேக்க உரோம சரித்திரங்களில் காணப்படுகின்றன.27

“கிரேக்கர் இன்ப நுகர்ச்சி கருதியோ பிள்ளைகளைப் பெறுதல் கருதியோ தமது மனைவியரை நண்பர்களுக்கு இரவல் அளித்தார்கள். ஸ்பார்ட்டன் மக்களுக்கு நீதிநூல் வகுத்த லைகுர்காஸ் என்பவர் மணமான பெண்களின் தயவைப்பெற முயன்றவர்களைப் பழிவாங்கும் பொருட்டுச் செய்யப்படும் போர்களைப் பற்றிப் பரிகசித்தார்; வயதில் முதிர்ந்த ஒருவன் இளம்மனைவியை வைத்திருந்தால் அவன் வீரமும் நேர்மையுமுடைய ஒருவனை அவளுக்கு அறிமுகப்படுத்தி அவன் மூலம் நல்ல குழந்தையைப் பெறுவதை அனுமதித்தார்; நல்ல ஒழுக்கம் உள்ள ஒருவன் விவாகமான ஒரு பெண்ணின் அழகைக் கண்டு அவள்மீது ஆசைப்பட்டால் அவன் அவள் கணவனின் விருப்பைப் பெற்று அவள் நட்பை அடைதல் தவறுடைய தன்று எனவும் அவர் விதித்தார். பிள்ளைகள் பெற்றோருக்குரியன வல்ல அரசாங்கத்திற்குரியவை என்னும் காரணத்தை லைகுர்காஸ் என்பவர் தனது சட்டத்துக்கு ஆதாரமாகக் கொண்டார். அதேன்சில் மனைவியரை நண்ப ருக்கு இரவல் கொடுத்தல் நட்பின் அடையாளம் எனக் கருதப்பட்டது. சொகி ரத்தஸ் என்னும் கிரேக்க ஞானியார் சாந்தப்பை என்னும் தனது மனைவியைத் தனது மாணாக்கரும் நண்பருமாகிய அல்சிபியாதிஸ் என்பவருக்கு இரவல் அளித்தார். காற்றோ என்பவர் தனது தலைவியாகிய மேரியா என்பவளை ஹொரென்சியஸ் என்பவருக்கு இரவலாகக் கொடுத்தார்.”

மனைவியரை மாற்றிக்கொள்ளுதல்
வட அமெரிக்காவில் வாழும் எஸ்கிமோவா தமது இருப்பிடத்தை விட்டு அயலிடங்களுக்கு வேட்டையாடச் சென்று தங்குவார்கள். அவ்வாறு செல்லும்போது ஒருவனுடைய மனைவிக்கு அவனுடன் செல்லமுடியாத காரணம் எதுவும் இருக்குமாயின் அவளுடைய கணவன் அங்கு உள்ள ஒருவனிடம் தனது மனைவியைக் கொடுத்துவிட்டு அவனுடைய மனைவி யைத் தன்னுடன் அழைத்துச் செல்வான். அவன் திரும்பி வந்ததும் மற்ற வனது மனைவியைக் கொடுத்துவிட்டுத் தனது மனைவியைப் பெற்றுக் கொள்வான். இது எவ்வகையிலும் ஒழுக்கத்துக்கு மாறுபட்டதாகக் கருதப்படுவதில்லை.

கற்பு
பெண், கணவனுக்கு அடங்கி நடத்தலோடு கணவனை ஒழிந்த பிற ஆடவரோடு சேர்க்கை வைத்திருத்தல் கூடாதென்னும் கட்டுப்பாடு தந்தை ஆட்சிக் காலத்தில் உண்டாயிற்று. இக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித் தொழுகுதலே கற்பு எனப்பட்டது. திருமணத்துக்குப் பின்பு பெண்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டே நடந்து வந்தார்கள், ஆனால் திருமணத்துக்கு முன்பு பெண்கள் தமது தயவைத் தாம் விரும்பிய ஆடவருக்கு அளித்து வந்தார்கள். திருமணத்துக்கு முன் பெண்கள் ஆடவர் பலருடன் சேர்க்கை வைத்துக்கொள்வதும், அவர்கள் மூலம் பிள்ளைகளைப் பெறுவதும் திருமணத்துக்குத் தடையாகக் கருதப்படவில்லை28. இளமை தொட்டுப் பெண்கள் கற்பாக இருக்கப் பழகும் பொருட்டே இளமையில் அவர் களுக்குத் திருமண நிச்சயம் செய்யப்படுவதாயிற்று. இவ் வழக்கினாலேயே பெண்கள் ஒரு ஆடவனை மாத்திரம் சேர்வதும் அவன் மூலம் பிள்ளை களைப் பெறுதலுமாகிய கற்பு முறையைப் பழகினார்கள். கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்பது இன்னொரு பெயர். கற்பு அல்லது பதிவிரதம் உடையவள் பதிவிரதை எனப்பட்டாள். பதிவிரதம் என்பதற்கு ஒரே பதியை அடையும் விரதம் அல்லது ஒரே பதியிடத்தில் உறுதிப்பாடு என்பது பொருள்.
குழந்தை மணம் புதியதா?

இந்திய நாட்டில் சில மக்கட் கூட்டங்களுக்கிடையில் சிறுவர் சிறுமியருக்கு மணஞ்செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. இது மிகக் கொடிய வழக்கம் எனக் கருதப்பட்டு அதற்கு எதிராக சாரதா சட்டம் என ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. சின்னஞ் சிறு வயதில் மணஞ் செய்யப்பட்ட இருவருள் கணவன் இளமையிலேயே இறந்துவிட்டால் பெண் தனது வாழ்க்கைக்காலம் முழுவதும் திருமணம் முடியாது கூந்தல் களைந்து எளிய வாழ்க்கை நடத்துதல் வேண்டுமென்னும் சமூகக் கட்டுப்பாட்டினா லும், மிக இளமையிலேயே பெண்கள் குழந்தைகளைப் பெறத் தொடங்கி விரைவில் இளைத்துப் போவதோடு பிள்ளைகளும் பலமற்றவர்களா கின்றார்கள் என்னும் கருத்தினாலும் சாரதா சட்டம் உண்டாவதாயிற்று. பெண்கள் கற்பாக இருக்கப் பழகுவதற்காகவே இவ்வழக்கம் ஆதியில் உண்டாயிற்று. பெண்கள் கற்பாக இருக்கப் பழகிய இக் காலத்தில் சிறு பிள்ளைத் திருமணங்கள் வேண்டியதில்லை என்பது உண்மையே29.

திருமண வரலாற்றுச் சுருக்கம்
மக்களின் முற்பருவத்தில் ஆடவர் ஒரு தனிக் கூட்டமாகவும், பெண்கள் மற்றொரு தனிக் கூட்டமாகவும் வாழ்ந்தார்கள். அப்பொழுது ஆடவர் கூட்டத்தினர் பெண் கூட்டத்தினரின் கணவராகக் கருதப்பட்டனர். ஓரு கூட்டத்திலுள்ள பெண்களெல்லோருக்கும் மற்றக் கூட்டத்திலுள்ள ஆடவரெல்லாம் கணவர் என்பதும், ஆடவர்கள் கூட்டத்திலுள்ள பெண்கள் எல்லோரும் மனைவியர் என்பதும் கொள்கையளவிலோ நடைமுறை யிலோ இருந்து வந்தது. அக் காலத்திலேயே ஒரு கூட்டத்துள் அல்லது கோத்திரத்துள் ஆண் பெண்கள் திருமணஞ் செய்துகொள்ளாலாகது என்னும் வழக்கு உண்டாயிற்று. இன்றும் தென்னிந்திய மக்கட் பிரிவினர் பலரிடையிலும், உலகின் பல பாகங்களிலும் இவ் வழக்கு இருந்து வருகின் றது. தென்னிந்திய மக்கள் கோத்திரம் எனக் கொண்டது தாய் வட்டத்தையே யாகும். கோத்திரமென்பது குலக்குறி “Totem” என மற்றைய மக்களிடையே வழங்கும். இன்று நீலகிரி மலையிலுள்ள தோடர் வகுப்பில் ஆடவர் சிலர் பெண்கள் சிலரைத் தமக்குப் பொதுவில் மனைவியராக வைத்திருக்கும் வழக்கு உண்டு என்று தேஸ்ரன் என்பார் கூறியுள்ளார்.

இவ்வகைக் கூட்டத் திருமணம் (Group marriage) சிலகாலம் நடைபெற்றபின் பெண்கள் தாம் விரும்பிய ஒரு ஆடவனையோ, பல ஆடவரையோ தெரிந்தெடுத்தார்கள்; தாம் விரும்பாதபோது அவர்களின் தொடர்பை நீக்கிவிட்டனர். சில காலத்தின்பின் அவர்கள் பல ஆடவரை ஒரிடத்தில் கூட்டி அவர்களுள் தாம் விரும்பிய ஒருவனைத் தெரிந்து கொண்டனர். இவ்வழக்கே சுயம்வரம் எனப்பட்டது.30

ஆடவர் கூட்டத்திலுள்ள ஒரு ஆடவன் பெண்கள் கூட்டத்தினின்றும் ஒரு பெண்ணைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டுவாழ விரும்பினான். அப்பொழுது அவன், பெண்கள் கூட்டத்தினின்று பெண்ணைத் திருடித் தனது கூட்டத்துக்குக் கொண்டு செல்வானாயினன். இதனைப் பெண்கள் கூட்டத்தினர் விரும்பமாட்டார்கள். இதனால் அவர்கள் தமது கூட்டத்தி னின்றும் ஒருத்தியை இழந்து விடுகின்றனர். பின்பு ஒரு பெண்ணைப் பெற விரும்பியவன், அக்கூட்டத்துக்கு நேரும் நட்டத்தை நிறைவு செய்யும் பொருட்டு அக்கூட்டத்தாருக்கு ஆடு மாடு முதலியவைகளைக் கொடுத் தான். இதில் இருந்து பெண்களை ஆடு மாடுகளைக் கொடுத்துப் பெறும் வழக்கு உண்டாயிற்று. இதன் பின் மணமகன் மணமகள் இல்லத்திற்கு சென்று பெண்ணின் சுற்றத்தாரின் இசைவைப்பெற்று அவளை மணந்து தனது இடத்துக்குக் கொண்டுசென்று வாழ்தலாகிய வழக்கு உண்டாயிற்று.

நாணம்
நாணம் பெண்களுக்குச் சிறந்த குணம். அது அவர்களுக்கு இயல்பாக உள்ளது என்று கருதப்படுகின்றது. இதன் காரணத்தை ஆராயின் நாணம் என்பது இடைக்காலத்திற்றோன்றியதேயாகும் என்பது தெளி வாகும். பெண்கள் தாம் விரும்பிய ஆடவரைத் தெரிந்து எடுத்துக் கொள் ளும் காலத்தில் ஆண்களைக்கண்டு நாணுதலாகிய குணம் அவர்களுக்கு உண்டாயிருந்தது என்று கூறுதல் அமையாது.

ஒரு பெண் பல கணவரை மணந்திருந்த காலத்தில் ஆண் பெண் சேர்க்கை தொடர்பான பொறாமை உண்டாதலும், ஒரு ஆண் பல மனைவி யரை மணந்திருக்கும்போதும் அவ்வகைப் பொறாமை தோன்றியிருத்த லும் இயல்பன்றோ. இப் பொறாமையிலேயே ஒருவன் ஒருத்தியையே மணத்தலும், ஒருத்தி ஒருவனையே மணத்தலுமாகிய மணமுறை உண் டாயிற்று. அக் காலத்தில் ஒருவனுக்குரிய மனைவியை பிறனொருவன் விரும்பிக் கவராமல் இருத்தற்கும், ஒருத்திக்குரிய கணவனைப் பிறள் ஒருத்தி கவர்ந்து கொள்ளாமல் இருக்கும்படியும், அவ்வகை விருப்புப் பிறருக்கு எழாதிருக்கும்படியும் சில சமூகக் கட்டுப் பாடுகள் தோன்றி வளர்ச்சியடைந்தன.

ஒரு சிங்கம் அல்லது புலி ஒரு விலங்கைக் கொல்கின்றது. அது அதன் இரையை மறைவான ஓரிடத்திற்கு இழுத்துச்சென்று அவ் விடத்திலேயே அதனை உண்கின்றது. அது மறைவான இடத்துக்கு அதனை இழுத்துச் செல்வது மாமிசத்தை உணவாகக் கொள்ளும் பிற விலங்குகள் அவ்விரையைக் காணின் அவையும் அவ்விரையை உண்ண விரும்பும்; அதனால் அவை அவ்விரையைக் கவர்வதற்கு முயற்சி செய்யும்; அதனால் சிங்கம் அல்லது புலியின் அமைதிக்குத் தடையுண்டாகும் என்று தெரிகின்றது. இவ்வகைக் கருத்தினைக் கொண்டே மக்களும் ஆண் பெண் சேர்க்கைகளைப் பிறர் காணாதபடி மறைவில் வைத்துக்கொள்வாராயினர். இது, காலத்தில் நாணத்தக்கதாகக் கொள்ளப்படலாயிற்று. பெண்கள் ஆடவருடன் சமமமாகப் பழகுவதாலும் அவர்களுடன் நன்கு அளவளாவு தலாலும் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சிகள் தோன்றுதல் இயல்பு. இது பற்றியே பெண்கள் ஆண்களைக் காணின் நாணி ஒதுங்கி நிற்றல் வேண்டும் என்னும் கட்டுப்பாடு உண்டாயிற்று. இக்கட்டுப்பாட்டின் வளர்ச்சியை நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனச் சொல்லப்படும் குணங்களாகும்.

உடை நாணத்துக்காக அணியப்பட்டதா?
உடை நாணத்துக்காக அணியப்பட்டது என இன்று நாம் கருது கின்றோம். உடை நாணம்பற்றித் தோன்றவில்லை. வெப்ப நாடுகளில் உடை அவசியம் தேவைப்படவில்லை. குளிர் நாடுகளில் மக்கள் தோல் கம்பளி முதலியவைகளால் தமது உடலைப் போர்த்துக்கொண்டார்கள். இதிலிருந்து மக்கள் தமது உடம்பை அலங்கரிக்கும் வழக்கம் உண்டாயிற்று; அவர்கள் அலங்காரத்தின் பொருட்டு உடம்பின் சில பகுதிகள் தெரியும்படியும் சில பகுதி மறையும்படியும் உடையணிவராயினர். இதிலிருந்து உடை அணியும் வழக்கு வளர்ச்சியடைந்தது. முகமூடிகளை அணிதல் உடம்பை நிறமைகள் பூசி அலங்கரித்தல் முதலியன மந்திர வித்தைக்காரரின் வழக்கங்களாக விருந்தன. இவ்வழக்கினின்றும் உடை அணியும் பழக்கம் உண்டாயிற்று. பழைய மக்கள் “கண்வைப்ப”தால் நோய்களும் தீமைகளும் உண்டாவதை நம்பினார்கள். கருக்கொண்ட பெண்களும், பிள்ளையைப்பெற்ற பெண்களும் தங்கள் தனங்களைப் பிறர் பார்ப்பின் கண்ணூறு உண்டாகும்; அதனால் பால் வற்றிப்போகும், அல்லது தனங்கள்மீது கட்டி, முதலிய நோய்கள் உண்டாகும் என நம்பினார்கள். ஆகவே அவர்கள் தமது மார்பை மறைக்கலானார்கள்.

பாலித்தீவு, மலையாளம் முதலிய நாகரிகமடைந்த நாடுகளில் மார்பை மறையாதுவிடுதல் நாணத்தக்கதென்றாவது, நாகரிகக் குறைவான தென்றாவது கருதப்படுவதில்லை. இதனால் நாணம் என்பதும் ஒருவகைப் பழக்கம் என நன்கு விளங்குகின்றது.

ஆடவர், தமது ஆண் உறுப்பினைப் பிறர் நோக்கின் கண்ணூறு உண்டாகி நோயுண்டாகும், மலடு உண்டாகும் எனக் கருதிப் பிறர் காணா வகை அதனை மறைப்பாராயினர். பெண்களும் இதே நோக்கத்துடன் தமது உறப்புக்களை மறைக்கலாயினர். இவ் வழக்கங்கள் நீண்டகாலம் தலைமுறை தலைமுறையாக வந்தன. அதனால் அவ்வுறுப்புக்களைப் பிறர் காணுதல் நாணத்தக்கது என்னும் கருத்து மக்கள் உள்ளத்தில் பதிந்து நாணமாக மாறிற்று.

சீனர் தமது பெண்களின் பாதங்களைச் சிறு வயதிலிருந்து இருப்புச் சப்பாத்திட்டு வளராதிருக்கச் செய்வர். அவர்கள் தமது பாதங்களைப் பிற ரெவரும் காணும்படி விடமாட்டார்கள். அவைகளைப் பிறர் காணும்படி விடுதல் ஆடவரும் மகளிரும் தமது இரகசிய உறுப்புக்களைப் பிறர் காணும் படி விடுதலினும் பார்க்க நாணத்தக்கதென அவர்கள் கருதுகின்றனர். இது நாணம் எவ்வாறு உண்டாகின்றதென நாம் நன்கு அறிந்து கொள்வதற்கு எடுத்துக் காட்டாகும்.31

கிரேக்க நாட்டில் பருவமடைந்த பெண்களும் வாலிபரும் நிர்வாணமாக நின்று பலர் முன்னிலையில் மல்யுத்தம் செய்தனர். நிர்வாணம் வெட்கத்துக்குரியதாக அவர்களால் கருதப்படவில்லை. கிரேக்க உரோமன் சிற்பங்களையும் தென்னிந்திய ஆலயங்களில் காணப்படும் சிற்பங்களை யும் நோக்குமிடத்துப் பெண்கள் அரைக்குமேல் உடையின்றியிருத்தலோ, முழுமையும் உடையின்றியிருத்தலோ வெட்கத்துக்குரியதாகக் கருதப்பட வில்லை என்று நன்கு விளங்கும்.

விதவைகளை உடன்கட்டை ஏற்றுதல்
விதவைகளை உடன்கட்டை ஏற்றும் வழக்கு தந்தை ஆட்சிக் காலத்திலேயே உண்டாயிற்று. தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர் குதிரை போன்றவை தம்முடன் மறு உலகுக்குச் செல்கின்றன என நம்பப் பட்டு வந்தது. ஆகவே பிரதாணி ஒருவன் இறந்தபோது அவன் மனைவியர் வேலையாளர் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்32 மனைவியரை உடன் கட்டை ஏற்றுவதற்குப் பிறிதோர் காரணமும் இருந்தது. கணவன் இறந்தபின் அவன் மனைவியர் பிற ஆடவரைக் கணவராகக் கொண்டு வாழ்வார் என்னும் பொறாமை அவன் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அவனது எண்ணத்தை நிறை வேற்றும் பொருட்டும் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டார்கள்.

விதவைகளை மொட்டை அடிக்கச் செய்தல்
மனைவியரைக் கணவனுடன் உடன்கட்டை ஏற்றுவதாகிய பொல்லாத வழக்கம் எல்லா நாடுகளிலும் நின்றுபோக நம் இந்திய நாட்டில் சில மக்களிடையே மாத்திரம் சமீப காலம் வரையில் நடைபெறுவதாயிற்று. அது பிராமண மக்களிடையே சமய சம்பந்தமும் பெற்று கிரியைகளுடன் நடத்தப்பட்டு வருவதாயிற்று. இக்கொடிய வழக்கம் நடவாதபடி ஆங்கில ஆட்சியினர் சட்டம் வகுத்தனர். அவ்வாறு செய்தமை சமயத்துக்கு மாறு என வைதீகரிற் பலர் அரசினரை எதிர்த்துப் போராடினர். மனச் சாட்சிக்கு எதிரானதும் மிருகத்தன்மை உடையதுமாகிய இவ்வழக்கத்தை அரசினர் தம்மால் பரிபாலிக்கப்படும் மக்களிடையே நடக்கவிடுவார்களா? அரசினரை எதிர்த்து கணவனை இழந்த மனைவியர் கூந்தலைக் களைந்து விதவை விரதம் காக்க வேண்டுமெனவும் அவர்கள் மறுமணம் செய்யவோ அல்லது பிறர் அவர்களை மணஞ்செய்து கொள்ளவோ கூடாதெனவும் சமூகக் கட்டுப்பாடுகள் செய்வாராயினர். ஒருவனுடன் மனையியாயிருந்த வள் இன்னொருவனைச் சேர்ந்து சுகம் அடைதல் கூடாதென்னும் பொறாமை உணர்ச்சியினால் தந்தை ஆட்சியாளர் உண்டாக்கிய சுயநலச் சட்டங்களே இவைகளாகும். அவ் வழக்கத்தில் தெய்வீகம் எதுவும் இருக்க வில்லை. இவ் வழக்கைப் பரிகசிப்பதற்குப் போலும் அராபிக் கதைகள் ஒன்றில் ஒரு தேசத்தில் மனைவி இறந்தால் கணவனை உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்னும் சட்டம் இருந்ததெனக் கூறப்பட்டுள்ளது. பெண்களை உடன்கட்டை ஏற்றவும், மொட்டை அடித்துக் கொள்ளவும் சமூகச் சட்டஞ் செய்த ஆண்கள் தம் மனைவியர் இறந்தால் தாமும் தம் மனைவியருக்கு விசுவாசமுடையவர்களாய் இருப்பதற்கு அறிகுறியாகத் தாமும் உடன் கட்டை ஏற வேண்டும், தாமும் கைம்மை விரதம் காத்தல்வேண்டும் என்னும் சட்டங்கள் செய்யாதிருந்தமை தான் விநோதம். ஆடவரின் மனப் பான்மை என்னே! இரங்கத்தக்கது.

இயற்கை விதி என்ன?
ஆண் பெண் சேர்க்கை சந்ததிப் பெருக்கத்துக்காகவே உண்டா கின்றது என நாம் நம்மைச் சூழ்ந்துள்ள அசைவுள்ள அசைவில்லாத உயிர்த் தோற்றங்களை எல்லாம் நோக்கி நன்கு அறிந்துகொள்ளுதல் கூடும். சந்ததியைப் பெருக்கும் பொருட்டுத் தாம் முதலில் தெரிந்தெடுத்த ஆடவன் மூலமே மேலும் மேலும் தாம் சந்ததியைப் பெருக்குதல் வேண்டும் எனப் பெண்கள் உள்ளத்தில் உதயமாகும் ஒருவகை உணர்ச்சியினாலேயே ஒருத்தி ஒருவனையே கணவனாகக் கொள்ளும் உணர்ச்சியோ, வழக்கோ, கற்பு என்னும் ஒழுக்கமோ உண்டாயிற்று. இவ்வுணர்ச்சி உறுதிப்படாத அளவில் அவள், தான் விரும்பிய பிற கணவரைத் தெரிதெடுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. இவ்வகை இயற்கை விதிகளுக்கு இடையூறாக, முட்டுக்கட்டையாக இருக்கும் சுயநலமுடைய ஆடவரின் கொடிய உணர்ச்சி இரங்கத்தக்கதொன்றே யாகும்.

இந்து “லா” வில் பெண்களுக்கு உரிமைகள்
மறுக்கப்பட்டதின் காரணம்
இந்து “லா” என்னும் சட்டத்தினால் இந்திய மக்கள் ஆளப்படு கின்றனர். இது இந்திய மக்களின் ஒரு சாராருக்குரிய சட்ட திட்டங்களைக் கொண்டு செய்யப்பட்டதேயாகும். உண்மையில் அது இந்திய மக்கள் எல்லோருக்கும் உரிய சட்டங்கள் ஆகமாட்டா. கிழக்கு இந்தியக் கம்பனி யார் இந்தியாவில் ஆட்சி தொடங்கியபோது இந்திய மக்களிடம் வழங்கும் சட்ட நூல்களைக் கொண்டுவரும்படி மக்களுக்கு அறிவித்தனர். அவர்களிற் சிலர் அக் காலத்தில் ஆரியப் பிராமணர்களால் தமது ஆக்கங் கருதி எழுதிவைத்த போதாயனம் அபஸ்தம்பம் முதலிய நீதி நூல்களையும் பிற ஸ்மிருதி நூல்களையும் கொடுத்தார்கள். மக்களின் ஆட்சிக்குரிய சட்டங்கள் அக் காலத்தில் எழுதி வைக்கப்படவில்லை என்றும், அவைகளை நியாயத் தார் (Judges) நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் மெகஸ்தீனஸ் என்பவரே குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்திய மக்களின் உண்மையான சட்டங்கள் கிழக்கிந்தியக் கம்பனியரின் கைக்கு எட்டவில்லை. ஆகவே அவர்கள் கிடைத்தவைகளைக் கொண்டு இந்து லா என்னும் சட்டங்களைச் செய் தார்கள். ஆரியர் தந்தை ஆட்சியினர். அவர்கள் பெண்களை கீழ்ப்படுத்தி யிருந்தனர், ஆதலினாலேயே ‘இந்து லா’வில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்திய சாதிக்குழுக்கள் (Castes and Tribes of Southern India) என்னும் நூலில் தேஸ்ரன் எழுதியுள்ளவைகளை நோக்கு வோமாயின் இந்தியர்களின் சட்டங்கள் வேறு “இந்து லா” வேறு என்று நன்கு விளங்கும். இந்து லா இந்தியர் “லா”வாக இல்லாமையினாலேயே அது திருத்தப்படல் வேண்டும் என்னும் கூச்சல்கள் கிளம்புகின்றன.

தாலி தரித்தல்
திருமணக் காலத்தில் கணவன், மனைவிக்குத் தாலி கட்டும் வழக்கம் தென்னிந்திய நாட்டில் மாத்திரம் காணப்படுகின்றன. தாலி கட்டுதல் என்பது ஒரு மாட்டுக்குக் கயிறு கட்டுதல்போல் தாலியைக் கட்டிப் பெண்ணை ஆடவன் அடிமை கொள்ளுதல் என்னும் ஓர் கருத்தும் உலவுகிறது. தென்னிந்திய மக்கள் இன்று போலவே பழங்காலத்திலும் பூக்களை மாலை யாகவும் விடு பூவாகவும் அணியும் விருப்புடையர். பெண், ஒர் ஆடவனைக் கணவனாகத் தெரிந்தெடுக்கும் காலங்களில் அவள் அவனுக்குப் பூ மாலையைச் சூட்டினாள். ஆடவனும், பெண்ணும் சம உரிமையுடைய வர்கள் என்னும் நிலைமையில் திருமணம் நிகழும்போது ஆடவன் பெண்ணுக்கு மாலை இட்டான்; பெண் ஆடவனுக்கு மாலை யிட்டாள். முற்காலப் பெண்களும் சிறுவரும் புலிப் பற்கோத்த மாலைகளை அணிவது வழக்கம். ஆடவன் திருமணக் காலத்தில் பெண்ணுக்கு அவ்வகை மாலை ஒன்றைக் கொடுத்தான். இன்றும் தென்னிந்திய மக்கட் கூட்டத்தினர் பலருக் கிடையில் திருமணக் காலத்தில் பெண்ணுக்குத் தாலி கட்டுவோர் புரோகிதர், கணவனின் உடன் பிறந்தாள் முதலியோராவர். சில கூட்டத்தினரிடையே திருமணம் நிச்சயமானவுடன் கணவனின் உடன் பிறந்தாள் பெண் வீட்டுக்குச் சென்று அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுகிறாள். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் திருமணக் காலத்தில் தாலி திரிக்கும் வழக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கைம்மை அடைந்த பெண் தனது கை வளைகளை உடைத்தெறிந்துவிடுவாள். இன்று தாலிதரித் திருத்தல் ஒரு பெண்ணின் கணவன் உயிரோடிருக்கிறான் என்பதை உணர்த்துகின்றது. இன்று கயிற்றில் அல்லது பொன் நாணிற் கோக்கப்பட்டிருக்கும் தாலி புலிப் பல்லின் வடிவுடையதா யிருக்கின்றது. சில கூட்டத்தினர் பொட்டுத் தாலியை அணிவர். மேல்நாட்டவர்கள் தாலிக்குப் பதில் மோதிரம் கொடுப்பர்.

உயிர்களில் ஆணினங்கள் பெண்ணினங்களை விட அழகுடையன. ஏன்?
பறவைகளில் பெண் பறவைகளை விட ஆண் பறவைகளே அழகுடையன. கோழி, மயில் முதலிய பறவை இனங்களைப் பார்த்து இவ் வுண்மையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாகும். பெரும்பாலும் பறவைகள் ஆண்டின் சிற் சில காலங்களிலேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக் கின்றன. பெண் பறவைகள் ஆண் பறவைகளுடன் சேர்ந்து கருக்கொள்ளும் காலத்தில் ஆண் பறவைகள் பெண் பறவைகளைக் கவரக்கூடியவாறு நிறத்தால் பிரகாசமடைகின்றன. விலங்குகளிலும் பெண்ணினங்களை விட ஆண் விலங்குகளே அழகுடையன. ஆண் சிங்கத்துக்குச் சடையிருத்தல், சில பெண் விலங்குகளுக்குக் கொம்பில்லா திருத்தல் ஆண் விலங்கு களுக்கு அழகிய கொம்பிருத்தல் போன்றவைகளாலும் பிறவற்றாலும் இதனை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். புனுகு, சவ்வாதுப் பூனைகளின் ஆண்கள் ஆண் பெண் சேர்க்கைக்குரிய பருவ காலங்களில் நறுமணத்தை வெளிப்படுத்திப் பெண் இனங்களுக்குக் கவர்ச்சி உண்டாக்குகின்றன.33 மக்களுள்ளும் ஆடவரே அழகிற் சிறந்தவராவர். பெண்கள் வெளியிற் சென்று வேலை செய்யாதிருப்பதினால் அவர்கள் சிறிது மினு மினுப்பு அடைகின்றனர். இன்னும் மேனி மினுக்குப் பொருள்கள், அணிகலன்கள் அழகிய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்கள் ஆடவரி லும் பார்க்க அழகாற் சிறந்தவர் போலக் காணப்படுகின்றனர். இரு பாலின ரையும் ஆடையணி வகைகளின்றி நிறுத்தி நோக்கின் இயற்கையில் ஆண்களே அழகுடையர் எனத் தோன்றும். இயற்கை, ஆணினங்களைப் பெண்ணினங்களிலும் அழகாகப் படைத்திருப்பது பெண்ணினங்கள் ஆண்களின் அழகாற் கவரப்பட்டு அவைகளை இயற்கைத் தெரிவு செய்து கொள்வதற்கே யாகுமென்க. பெண்களின் பொருட்டு ஒன்றோடு ஒன்று போரிடுவன ஆண்களே; பெண்கள் ஒருபோதும் ஆண்களின் பொருட்டுப் போரிடுவதில்லை.

பொது மகளிர்
ஒரு காலத்தில் திருமணமாகாத பெண்கள் தமது தயவைத் தாம் விரும்பிய ஆடவர்களுக்கு அளிப்பவர்களாயிருந்தனர். ஒருவன் ஒருத்தியை மணஞ் செய்துகொள்வதால் அவள், குடும்பத்தின் பொது உடைமை என்பதினின்றும் நீங்கி ஒருவனின் தனி உடைமையானாள். இவ்வாறு மணமாகி ஒருவனுக்கு உரிமையாகாத பெண்கள் பொது மகளி ராகவே இருந்துவந்தனர். இன்றும் சில சமூகங்களுக்குள் திருமணமான பெண்கள் தமது தயவைத் தம் கணவரின் உறவினராகிற ஆடவருக்கு அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். பிற்போக்குடைய தென்னிந்திய மக்கள் சிலரிடையே இன்றும் இவ்வழக்கத்தைக் காணலாகும்.34

மேற்குத் தேசங்களில் பொது மகளிராக வாழ்க்கை நடத்தும் பெண்களின் தொகை மிகப் பலவாகும். நீதிபதி லின்சி என்பார் கூறியிருப் பது வருமாறு: ‘நியூயோர்க் நகரில் தங்கள் கணவரல்லாத ஆடவருடன் வாழும் பெண்கள் ஐம்பத்தினாயிரத்துக்கு மேற்பட்டவராவர். இலண்டன் பட்டினத்தைப்பற்றி அறியுமிடத்து அங்கு இம்முறையில் வாழும் பெண்களின் தொகையும் இவ்வெண்ணுக்கு நேராகக்கூடும் எனத் தெரி கின்றது. இவ்வாறு வாழும் பெண்கள் பெரும்பாலும் 18 வயதுக்கு இடைப் பட்டவர்களாவர்.’35 பொது மகளிர் காலத்தில் விலைமாதர் ஆகமாறினர். 1926ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு நூலில் பாரிஸ் நகரில் மாத்திரம் காணப்படும் பதிவு செய்த விலைமாதரின் எண் எழுபதினாயிரம் என்றும், பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை இத்தொகையிலும் பன்மடங்கு ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளன.36

தேவடியாள் வழக்கம்
முற்காலத்தில் சமயத்தின் பெயரால் தீய ஒழுக்கங்கள் பல நிலவின. அவைகளுள் தேவடியாள் வழக்கமும் ஒன்றாகும். இது அக்கால மக்களால் குற்றமாகக் கருதப்படவில்லை. ஒரு காலத்தில் பெண்களை உயிருடன் இறந்த கணவரோடு வைத்துக் கொளுத்துதலை மக்கள் சிலர் உயர்ந்த அறமாகக் கருதினார்களல்லவா? ஆபிரிக்காவின் சில பாகங்களில் வயது முதிர்ந்த பெற்றோரைப் பிள்ளைகள் கொன்று அவர்களின் இறைச்சியைக் கடைகளில் விற்றார்கள். இது அவர்கள் சமூகத்தில் குற்றமாகக் கருதப்பட வில்லை. ஐரோப்பிய நாடுகளில் நோயினாற் பிழைக்கமாட்டாதவர்களை அவர் சுற்றத்தினர் ஆலயங்களுக்குக் கொண்டு சென்று தண்டாயுதத்தினால் அடித்துக் கொன்றார்கள். இவ் வகைத் தண்டாயுதங்கள் குடும்பத் தண்டா யுதங்கள் என்னும் பெயருடன் இன்றும் சுவிடன் தேசத்திலுள்ள கிறித்துவ ஆலயங்களில் உள்ளன. தேவடியாள் வழக்கம் உலகம் முழுமையினும் ஒருகால் காணப்பட்டதாயினும் அது இன்றும் இந்திய நாட்டில் காணப்படு கின்றது. அவ்வழக்கம் நாள் வீதம் மறைந்து வருகின்றது.

தேவடியாள் வழக்கம் உண்டான வரலாறு ஈண்டு கூறப்படுகின்றது. முற்காலத்தில் ஆடவரும் மகளிரும் தனித் தனிக் கூட்டத்தினராக வாழ்ந்து வந்தார்கள். ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ இரு பாலரும் பொது இடங்களிற் சந்தித்துக்கொள்வதாகிய வழக்கம் இருந்து வந்தது. பின்பு பொது இடமாகிய ஆலயத்தில் நிகழும் ஆண் பெண் சேர்க்கை பரிசுத்தமுடைய தாகக் கருதப்பட்டது. தந்தை ஆட்சி உண்டாகி வியபிசாரம் குற்றமாகக் கொள்ளப்பட்ட காலத்திலும் ஆலயங்களிற் செய்யப்படும் வியபிசாரம் குற்றமாகக் கருதப்படவில்லை. இது பபிலோனிய, அசீரிய பழஞ் சட்டங் களைக் கொண்டு நன்கு அறியப்படுகின்றது. அக் காலத்திலே மேற்கு ஆசிய நாடுகளில் பெண்கள் ஆலயங்களிற் சென்று ஆடவரைச் சேர்த லாகிய நேர்த்திக் கடன்கள் செய்தல் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது.37 மேற்கு ஆசிய நாடுகளில் இவ்வழக்கம் எவ்வாறு மிக மலிந்து காணப் பட்டன என்பதற்கு எடுத்துக்காட்டு கீழே காட்டப்பட்டுள்ளது.

முற்காலத்தில் தாய்க்கடவுளரின் கோயில்களில் பெண்கள் பூசாரி களாகவிருந்தனர். கன்னிப்பெண்கள் பலர் தேவடியாட்களாக வந்தடைந் தனர். ஆலயங்களில் நிகழும் ஆண் பெண் சேர்க்கை புனிதமுடையதென்று கருதப்பட்டதாதலின் அப்பெண்கள் ஆலயங்களுக்கு வரும் ஆண் தேவ அடியாரைச் சேர்வாராயினர். தேவ அடியார் ஆகிய பெண்கள் ஆண் கடவு ளரின் ஆலயங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட போது அவர்கள் கடவுளின் மனைவியர் எனப்பட்டனர். கடவுளின் கடமையைக் குருமார் நிறைவேற்றி வந்தனர். இவைபோன்ற பழக்க வழக்கங்களின் வளர்ச்சியே தேவதாசி வழக்கமாக நிலவுகின்றது.

கன்னி அழித்தலில் அச்சம்
முற்கால ஆடவர் பெண்களின் கன்னிமையை அழிப்பதில் பெரிதும் அச்சங்கொண்டிருந்தார்கள். ஆகவே கன்னிப் பெண்கள் ஆலயங் களுக்குச் சென்று தாம் விரும்பிய ஆடவரைக் கூடித் தமது கன்னிமையை அழித்துக் கொண்டார்கள். சில நாடுகளில் அரசரும் குருமாரும் இக் கடமையை நிறைவேற்றி வந்தார்கள்.38 மலையாளத்தில் இவ்வழக்கம் சமீபகாலம் வரையில் நிகழ்வதாயிற்று.39 வியபிசாரங்களுக்குச் சமயம் ஆதரவளித்தபடியாலே ஆலயங்களில் வியபிசாரம்புரியும் தேவடியாட்கள் நிறைந்திருந்தனர். தஞ்சாவூர் பெரிய ஆலயத்தில் 400 தேவடியாட்கள் இருந்தார்கள் என்பதற்குக் கல்வெட்டு தொடர்பான சான்று உண்டு. மகமத் கசனி சோமநாத ஆலயத்தைத் தகர்த்தபோது அங்கு முந்நூறு தேவடி யாட்கள் இருந்தனர்.

தாய்மார் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்க்குங் காலம்
கருக்கொள்ளுங்காலத்தில் மாத்திரம் பெண் விலங்குகளும் ஆண் விலங்குகளும் சேர்கின்றன. கருக்கொண்ட பின் பெண் விலங்குகள் ஆண் விலங்குகளைத் துரத்தி விடுகின்றன. குட்டி யீன்று அவைகள் பெரிதானபின் மறுபடியும் கருக்கொள்ளும் காலத்திலேயே அவை மறுபடியும் ஆண் விலங்குகளைச் சேருகின்றன. கருத்தரித்தபின் அவை ஆண் விலங்கு களைச் சேர்வதில்லை. இதே விதி மக்களிடையும் இருந்தது. இன்றும் பிற்போக்குடைய மக்களிடையே இவ்வொழுக்கு இருந்து வருகின்றது. சில கூட்டத்தினரிடையே பெண்கள் ஆறு ஏழு ஆண்டுகள் வரையில் பிள்ளை களுக்குப் பால்கொடுத்து வளர்ப்பார்கள். அவ்வளவு காலமும் அவர்கள் ஆண் சேர்க்கையின்றியிருப்பர். நாகரிகமே இப்பபொழுது இவ்வியற்கை விதியை மாற்றிவிட்டதுபோலும்.40

இக் காலத்து மருத்துவ அறிஞரும் அறிவாளிகளும் தாழ்ந்த மக்களிடையே காணப்படும் ஆண் பெண் சேர்க்கை விதிகளே மிக ஏற்புடையன எனக் கூறுகின்றனர்.41

ஆண் பெண் சேர்க்கையின் நோக்கம்
ஆண், பெண் சேர்க்கை சந்ததிகளைப் பெருக்கும் நோக்கம் ஒன்றற் காகவே உள்ளது. இவ்வியற்கை விதியை மீறி நடப்பவர்கள் உறுதியாகத் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். ஆண் பெண் சேர்க்கையினால் ஆண் களே பெரிதும் தம் வலிவை இழந்துவிடுகின்றனர். மனிதன் தான் பயன் படுத்தும் மாடு குதிரைகளின் ஆணினங்களைப் பெண் விலங்குகளோடு சேராமல் இருக்கும்படி தனியே வைத்து வளர்க்கின்றான்; இன்றேல் அவை களின் விதையை அடித்து விடுகிறான். ஆண் பெண் சேர்க்கையினால் ஆண்கள் தமது வலிவை இழந்து விடுகின்றனர் என்னும் கருத்துப் பற்றியே அவன் அவ்வாறு செய்து வருகிறான்.

முனிவர் ஒருவர் நீண்ட காலம் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பெண் ஒருத்தியைக்கண்டு அவள்மீது ஆசைகொண்டு அவளைச் சேர்ந்தார். அதனால் அவர் தனது தவ வலிவை இழந்துவிட்டார் என்பன போன்ற பழங்கதைகள் புராணங்களிற் காணப்படுகின்றன. இக்கதை களே பெண்களின் சேர்க்கையால் ஆடவர் தமது உடல் வலி மன வலிகளை இழந்துவிடுகிறார்கள் என்பதை உணர்த்துவதற்கு எழுந்தவைகளேயாகும். பெண்களின் சேர்க்கையில் அதிகம் அழுந்தும் ஆடவன் ஐம்பது ஆண்டு களுள்ளேயே இளைத்து ஓய்ந்துவிடுகின்றான். அமெரிக்காவில் மனைவியை இழந்தவர்களிலும் பார்க்கக் கணவனை இழந்த பெண்களின் எண் 2,00,000 அதிகம் என்று கணக்கு இடப்பட்டது. (1926)42 இது ஆடவர் அளவுக்கு அதிகம் பெண்போகத்தில் அழுந்தியதன் பயன் எனப் படுகின்றது.

பெண்கள் உயர்நிலை அடைவதற்கு வழி
பெண்கள் தற்போது தமது வாழக்கைக்கு ஆடவரையே எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தாமே பொருளீட்டித் தம் வாழ்க்கை யையும் குடும்ப வாழ்க்கையையும் நடத்தும் நிலையிலுள்ள பெண்கள் ஆடவரை ஒப்பவோ, ஆடவரிலும் மேலாகவோ அதிகாரமுடையவர் களாக வாழ்ந்து வருதலை நாம் காண்கின்றோம். ஆண்களும் பெண்களும் வேலைசெய்து பொருளீட்டும் வேலைக்கார வகுப்பினர்களிடையே பெண்கள் ஆண்கள் ஒப்ப அதிகாரம் உடையவர்களாக இருக்கின்றனர். சில சமயங்களில் ஆடவன் உழைப்பற்றவனாகிவிட மனைவியே ஆசிரியை யாகவோ, எழுத்தாளியாகவோ, வேலை புரிந்து குடும்பத்தைக் காப்பாற்று கின்றாள். இவ்வகைக் குடும்பங்களில் கணவனை விட மனைவியே குடும்பத்தில் அதிகாரம் உடையவள். இவைபோன்ற நிகழ்ச்சிகளால் குடும் பத்தில் மனைவிக்கோ கணவனுக்கோ அதிகாரம் உண்டாவது பொருளா தார நிலையினால் என்று நன்கு விளங்குகின்றது. சில இடங்களில் பெண்களின் பெற்றோர் பெண்ணின் கணவனை விலை கொடுத்து (சீதனம் கொடுத்து) வாங்குகின்றனர். பெண்ணின் பெற்றோர் எவ்வளவு அதிகம் விலை கொடுக் கிறார்களோ அவ்வளவுக்குக் கணவன் பெண்ணின் அடிமையாக வாழ்ந்து வருகின்றான். இவ்வகை நிகழ்ச்சிகளைப் பெரிதும் இலங்கையின் வடபகுதி யில் வாழும் தமிழ்க் குடும்பங்களிடையே நாம் இன்றும் காணலாகும்.

பெண்கள் உயர்நிலை எய்த வேண்டுமாயின் அவர்கள் தமது வாழ்க்கையைப் பிறர் எவரின் கையையும் எதிர்பாராது நடத்தக்கூடிய நிலையை எய்தல் வேண்டும். ஆகவே அவர்கள் தாம் பருவம் அடையும் காலத்தில் தம் வாழ்க்கைச் செலவுக்கு வேண்டும் பொருள் தொகுக்கக்கூடிய கல்வியை இளவயதிலிருந்து பயிலுதல் வேண்டும்.

இன்று உண்மையில் நிகழ்வது என்ன?
இன்று ஆடவனே பெண்ணுக்கு அதிகாரி என்பது கொள்கை யளவில் இருந்து வருகின்றது. ஆனால் நிகழ்ச்சி இதற்கு நேர்மாறாகவே இருந்துவருகின்றது. அந்தரங்கத்தில் கணவன் மனைவிக்கு முன் நடுநடுங்கு கின்றான். இவ்வகைக் காட்சிகளே, நாடகங்களிலும், பேசும் படங்களிலும் காட்டப்படுகின்றன. திருமணமான ஒவ்வொருவனுக்கும் கணவனைவிட மனைவியே மேலானவல்லமையுடையவள் என்று இதயத்தில் நன்கு தெரியும். ஆயினும் அவன் தனது கருத்தை எளிதில் வெளியிடுவதில்லை.

உண்மையான அன்பு இருக்குமானால்
பெண் ஒருத்தி தன் கணவனிடத்தில் உண்மையான அன்பு வைத்திருந்தால் அவன் தான் விரும்பிய இன்னொருத்தியை அடைதலைக் குறித்து வருந்தமாட்டாளென்றும், அவ்வாறே கணவனும் அவள் தான் விரும்பிய இன்னொருவனை அடைதலைக்குறித்து கவலை கொள்ள மாட்டானென்றும் மேல்நாட்டறிஞர் கூறியுள்ளார்.43

தேன்நிலவு (HONEY MOON)
திருமணத்துக்குப்பின் கணவனும் மனைவியும் உல்லாசப் பயணஞ் செய்து சில நாட்கள் தனித்து வாழ்தலை ஹனி மூன் என்று மேல்நாட்ட வர்கள் வழங்குகின்றனர். இது யாதோ சிறந்த ஒழுக்கம் எனக் கருதிக் கீழ் நாட்டவர்களிற் பலரும் அதனைப் பின்பற்றி வருகின்றனர். முற்காலத்தில் ஆடவன் ஒருவன் ஒரு தாய்வட்டத்திலிருந்து ஒரு பெண்ணைத் திருடிக் கொண்டு, அத்தாய்வட்டத்திலுள்ளவர்களின் சினம் தணியும் வரையில் மறைவில் வாழ்வதாகிய இவ்வழக்கமே “ஹனி மூன்” எனப்படுகின்றது. நம்மவர் மேல் நாட்டவரைப் பார்த்துக் காற் சட்டை, டை, காலர் முதலியவை களை அணிவது போன்றது இவ்வழக்கம். “கண்ட பாவனையிற் கொண்டை முடிதல்.”

பெண் எப்பொழுதும் பிற ஆடவரை நினைத்து ஆசைப்படுகிறாளா?

மக்களுக்கு மண், பெண், பொன் என முப்பெரும் ஆசைகள் உண்டு எனத் தத்துவ சாத்திரிகள் கூறியிருக்கின்றனர். விலங்குகளிலும், பறவைகளி லும், சிற்றுயிர்களிலும் ஆண்களே பெண்ணை நாடிச் செல்கின்றன; மக்க ளிடையும் இவ்விதியே அமைந்தள்ளது. இயற்கை விதி இவ்வாறாகவும் புராணக்கதைகளிலும், பாரதம், இராமாயணங்களிலும் பெண்கள் உறுதியான மனமுடையவர்கள் அல்லர் என்றும் அவர்கள் கருத்து எப்பொழுதும் பிற ஆடவர் மீது ஒடிக்கொண்டு இருக்கும் என்றும், இயற்கைக்கு மாறாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆடவர் பெண்களை அடிமைப்படுத்திய காலத்தில் தாம் எழுதும் நூல்களில் தாம் விரும்பிய வாறெல்லாம் பெண் களைப்பற்றி எழுதிவிடலாமல்லவா? “அருக்கு மங்கையர் மலரடி பரவி யும்” என வரும் அருணகிரி நாதர் பாடல், விலைமாதராயினும் அவர்கள் ஆடவர் எண்ணத் துக்கு எளிதில் இடங்கொடார் என்பதை விளக்குகின்றது. (அருக்கு-அருக்குகின்ற) “எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி என்பதெல்லாம் பெரும் பேதைமைத்தே” என்பதுபோன்ற வாக்கியங்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்படவேண்டும்.

முத்தத்தின் வரலாறு
தாய் குழந்தையிடத்துள்ள அன்பு முதல் காதல்வரையில் பலவகை உணர்ச்சிகளை முத்தம் உணர்த்துகின்றது. ஆகவே முத்தம் பலவகைப்படும். இம் முத்தத்தின் வரலாறு மிக இன்பம் அளிப்பதாகும். அதனை இங்கு ஆராய்வோம்.

உயர்ந்த நாகரிக மக்கள் முத்தங்களினால் தமது அன்பைத் தெரி விக்கிறார்கள். தாய் பிள்ளையை முத்தமிடுகின்றாள், காதலர் ஒருவரை ஒருவர் முத்தமிடுகின்றார்கள். சில நாடுகளில் நண்பர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்வர்! இம் முத்தங்களில் தாயின் முத்தமும் காதலர்களின் முத்தமுமே சிறப்புடையன.

பழைய எகிப்தியர் முத்தத்தை அறியார். பழைய கிரீசிலும் அசிரியாவிலும் இது வேரூன்றியிருந்தது. இந்தியாவிலே இது மிகப் பழமையே இருந்தது. தொடுதலே உணர்ச்சிகளுள் முதன்மையுடையது. முத்தமும் இது சம்பந்தமாகத் தோன்றின தெனக் கருதலாம். பறவைகள் தமது அலகுகளால் ஒன்றை ஒன்று முத்தமிடுகின்றன. சில பூச்சிகளும் இவ்வாறு செய்கின்றன. கரடிகளிடத்தும் நாய்களிடத்தும் கீழ் நிலையிலுள்ள மக்கள் முத்தமிட்டுக் கொள்வதுபோன்ற செயல்களைக் காணலாம். நாகரிக மக்களின் முத்தத்துக்கும், பூனைகள் ஒன்றை ஒன்று மோப்பது போன்ற காட்டுமிராண்டிகளின் முத்தத்துக்கும் அதிக வேறுபாடு உண்டு.

முத்தத்தின் வகைகள்
கீழ்த்தரமான முத்தங்கள் மூக்கோடு மூக்கை உரைஞ்சுதல் எனக் கூறப்படும். மோத்தல் போன்ற முத்தம் மூக்கோடு சம்பந்தப்பட்டது. மயோரியர், சாண்டவிச்திவினர், எஸ்கிமோவர், மலாயரின் பெரும் பகுதியினர்களின் முத்தம் இவ்வகையினதே. மூக்கை உரைஞ்சுவதாகிய முத்தம் “மலாய முத்தம்” எனப்பெயர் பெறும். முத்தம் கொடுப்பவன் முத்தம் பெறுபவன் மூக்கில் சரிகோணம் (Right angle) விழும்படியாக மூக்கை வைத்து அழுத்துதல் மலாய முத்தம் எனப்படும் என்றும் இது ஐரோப்பியர் கைகுலுக்குவதை ஒத்ததென்றும் டார்வின் கூறியுள்ளார். தென்கடல் தீவு மக்கள், ஒருவர் மூக்கின்மேல் ஒருவர் மூக்கை வைத்து அழுத்தி உரைஞ்சி முத்தமிடுவார்கள். ஆஸ்திரேலியர் முகத்தை முகத்தோடு உரைஞ்சிக்கொள் வர். தாழ்ந்த மக்களிடையே தாய்மார் குழந்தைகளை நக்குவார்கள். மிகப் பழங்கால முத்தம் மூக்கைக் கன்னத்தில் வைப்பதாகும். கயோந்தா (khyountha) மக்கள் வாயையும் மூக்கையும் கன்னத்தில் வைத்து உறிஞ்சு வார்கள். சீனர், மங்கோலிய சாதியினருட் பலர் இலாப்பியர் முதலியோர் மூக்கைக் கன்னத்துக்கு நேராக வைத்து அழுத்தி மோந்து கண் இமைகளைத் தாழ்த்தி இதழ்களால் அழுத்துவர். யப்பானிய மொழியில் முத்தம் என்பதைக் குறிக்கும் சொல் இல்லை. அவர்களிடையே தாய் குழந்தையை முத்தமிடுவ தாகிய முத்தம் மாத்திரம் வழங்கும்.

ஐரோப்பியருடைய முத்தம் இதழ்களை மற்றவரின் முகம் தலை அல்லது உடலில், அல்லது இதழ்களில் வைப்பதாகும். அவர்கள் மூக்கைப் பயன்படுத்துவதில்லை. இது ஒரு தனிப்பட்ட முறையாகக் காணப்படுவதால் இது காட்டு மிராண்டிகளின் பழக்கத்திலிருந்து வளர்ச்சியடைந்ததெனக் கருதுதல் தவறாகும்.

முத்தம் என்பது மோந்தும் சுவைத்தும் பார்த்தல் எனச் சிலர் கூறி யிருக்கின்றனர். சிலர் அது சுவைத்துப் பார்க்கும் முறையான வணக்கம் என்பர். சிலர் அது கடித்து உறிஞ்சிப் பார்த்தல் என்பர். காட்டுமிராண்டித் தாய்மார் பிள்ளைகளை விளையாட்டாகக் கடிப்பார்கள். பல சாதியின ரிடையே காதலர்களும் இவ்வாறு செய்து கொள்வர். முத்தம் என்பது ஒருவகைப் பேச்சு என்று கருதப்படுகின்றது. காதலருடைய முத்தம் தாயின் முத்தத்திலிருந்து தோன்றியதெனச் சிலர் கூறுவர். தாய் குழந்தைக்குக் கொடுப்பதல்லாத முத்தத்தை யப்பானியர் அறியார். ஆபிரிக்க மக்களிடை யும் அனாகரிக மக்களிடையும் கணவன் மனைவியரும் காதலரும் முத்த மிடுவதில்லை. வட அமெரிக்கப் பெண் இதழ்களைக் கன்னத்தில் மெதுவாக வைத்து முத்தமிடுகிறாள். அவள் யாதும் சத்தம் செய்வதில்லை. ஐரோப்பிய ரின் முத்தம் உண்பதுபோன்றது எனச் சீனர் கூறுவர்.
நீகிரோவருடைய முத்தம் மோத்தல் போன்றது.

இலத்தின் மொழியில் முகத்தில் அல்லது கன்னத்தில் நண்பருக்கு இடும் முத்தம் அசூலம் (Assulum) எனப்படும். உதடுகளையும் உதடுகளை யும் சேர்த்து அன்பினால் இடும் முத்தம் பாசியம் (Basium) எனப்படும். காதலர் இதழோடு இதழ் வைத்து முத்தமிடுவது சாவியம் (Savium) எனப்படும். இம் முத்தங்கள் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வழங்குகின்றன. வாயில் முத்தமிடுவது காதலர்களுக்கு மாத்திரம் உரியது. காதல் காரணமாயல்லாமல் வாயில் முத்தமிடுவது பாவம் என்று பிரான் சியரால் கருதப்படுகின்றது.

கிரேக்க இலத்தினிய பெற்றோர் பிள்ளைகளை முத்தமிட்டார்கள்; காதலரும் மணமானவர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டார்கள். இது போலவே ஆண்களாகிய நண்பர்களும், ஆண்பெண்ணாகிய நண்பர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். பலவகையான சமயக் கிரியைகளில் முத்தம் பயன்படுத்தப்பட்டது. எபிரேய மக்களிடையும் இவ் வழக்கம் இருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் முத்தமிட்டுக் கொள்வது அனுமதிக்கப்படவில்லை. பிரியாவிடை, மரியாதை, உபசரித்தல் என்பவை களுக்கு மாத்திரம் முத்தம் பயன்படுத்தப்பட்டது. செமித்திய மக்களிடையே முத்தம் சமய சம்பந்தமாக வழங்கிற்று. கிறித்துவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி முத்தமிடுவது பழைய மக்களில் சமூக வழக்கத்தைப் பற்றி யது. கிறித்துவ மதத்தில் முத்தம் அருளைக் கொடுப்பதாகக் கருதப்பட்டது. முற்காலத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் குருமார் பரிசுத்தமான முத்தம் கொடுத்து வந்தனர்.

இலக்கிய காலத்தில் நடைபெற்ற முத்தங்கொடுக்கும் வழக்கங்கள் மத்தியகாலம் வரையில் இருந்துவந்தன. இங்கிலீஷ் பெண்கள் ஆண் நண்பரை முத்தமிடும் உரிமையைச் சிறப்பாகச் பெற்றிருந்தார்கள். இங்கி லாந்தில் பிற்காலத்தில் ஓரு மாற்றமுண்டாயிற்று. அப்பொழுது முத்தம் பெற்றோருக்கும், காதலருக்கும் உரியதாயிருந்தது. பிறப்பினால் அல்லது திருமணத்தினால் உறவினரல்லாத ஆண்களை முத்தமிடும் வழக்கம் நின்று போயிற்று. இப்பொழுது காதலர், ஒரே குடும்பத்தினர், பெண் நண்பர்களுக் குள் மாத்திரம் முத்தமிடும் வழக்கம் இருந்து வருகின்றது. ஐரோப்பாவில் ஆண் நண்பர் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்ளும் வழக்கம் இன்னும் இருந்து வருகின்றது. இது முக்கியமாகப் பிரான்சில்தான் உண்டு. இது அரசர்களுக்கிடையில் இருந்து வந்தது. மரியாதையின் அடையாளமாகப் பெண்களின் கையை முத்தமிடும் வழக்கம் மத்திய காலத்தில் ஆரம்பித்தது. இது சாதாரண வழக்கில் இல்லை; பெரியவர்கள் சிலருக்கிடையில் இருந்து வருகின்றது.

சமூக சமய வழக்கங்கள்
தழுவிக்கொள்ளுதல், வணங்குதல் போன்றவைகளுக்குப் பதில் முத்தம் பயன்படுகிறது. இவ்வழக்கம் மறைந்து போன நாடுகளில், அதற் காகச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஸ்பானியர் “நண்பனது கையை முத்தமிடுகின்றேன்” எனக் கூறுவார்கள். மீதியர் கைகளை மாத்திரம் முத்தமிட்டார்கள். ஒடிசியஸ் திரும்பிவந்தபோது அவனது நண்பர்கள் தலை கை தோள் என்பவைகளில் அவனை முத்தமிட்டார்கள். கிரீசில் தாழ்ந்தவர்களே உயர்ந்தவர்களின் கை, மார்பு அல்லது முழந்தாள்களை முத்தமிட்டார்கள். பாரசீகத்தில் சமமானவர்கள் ஒருவரை ஒருவர் வாயில் முத்தமிட்டார்கள்; சிறிது ஏற்றத் தாழ்வுடையவர்கள் கன்னத்தில் முத்தமிட் டார்கள். மிகத் தாழ்ந்தவன் முன்னால் விழுந்து வணக்கம் செலுத்தினான். ஏசுவா, யாக்கோப்பின் கழுத்தில் விழுந்து முத்தமிட்டான். எபிரேயருள் கன்னம், நெற்றி, தாடி, கை, பாதம் என்பன முத்தமிடப்பட்டன. பலஸ்தீனிய ரிடையே நடைபெறும் முத்தம் பின் வருமாறு கூறப்படுகின்றது. முத்தமிடும் இருவரில் ஒவ்வொருவரும் தலையையும் முகத்தையும் கீழே தாழ்த்தி மற்றவரின் தோள் முட்டில் வைத்து மற்றவரின் வலது கன்னத்தில் முத்தமிடுகின்றனர்; பின்பு தலையை மற்றவரின் வலது தோளில் வைத்து இடக்கன்னத்தில் முத்தமிடுகின்றனர். மிகவும் மரியாதையான வணக்கம் ஒத்த இருவர்களுக்கிடையில் நடக்கும்போது ஒருவர் மற்றவரின் தாடியைப் பிடித்து முத்தமிடுகிறார். பெண்களும் கணவர், பிள்ளைகள், தந்தையினரை முத்தமிடுகின்றனர்; மரியாதையுள்ள குடும்பத்தில் ஒத்த நிலைமையுடைய வர்கள் வலது கையை மற்றவரின் இடதுதோளில் வைத்து வலக் கன்னத்தை முத்தமிடுவார்கள். பின் இடக் கையை வலத் தோளில் வைத்து இடக் கன்னத்தை முத்தமிடுவார்கள். ஒருவர் தமது வலக் கையை மற்றவரின் வலக் கையைப் பிடித்துப் பின்பு தமது நெற்றியில் அல்லது நெஞ்சில் வைப்பர். தாழ்ந்தவர்கள் மேலானவர்களின் கையை முத்தமிட்டார்கள். அசீரிய பட்டையங்களில் கீழ்ப்படிவைக் காட்டுவதற்கு அரசனுடைய பாதங்கள் முத்தமிடப்பட்டன என எழுதப்பட்டுள்ளது. கிறித்து சமயத்தவர்கள் கிறித்துவின் பாதத்தை முத்தமிட்டுத் தமது வணக்கத்தைத் தெரிவிக்கும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. கிரியைகளில் போப்பாண்டவரின் பாதங்கள் முத்தமிடப்பட்டன. கி.பி. 847இல் அது பழைய வழக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. இது உரோமர் அரசரை வழிபடும் வழக்கத் தினின்றும் தோன்றியதெனக் கருப்படுகின்றது. விழுந்து வணங்குவது பயம், மரியாதை என்பவைகளைக் காட்டுவது. கிரேக்கர் தமது கீழ்ப் படிவைக் காட்டுவதற்கு முழந்தாள்களைப் பிடிப்பது வழக்கம். இவைகளின் பண்பாடே பாதங்களை முத்தமிடுவது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற் பாட்டில் ‘பாததூளியை நக்குவது’ என வரும் சொற்றொடரின் பொருளும் இதுவே. பழைய இந்தியாவில் மரியாதையைக் காட்டும் சின்னம் இதுவே. மத்திய காலங்களில் ஐரோப்பிய அரசர் ஒருவரை ஒருவர் கன்னங்களில் முத்த மிட்டார்கள். குடிகள் அரசனின் கையை முத்தமிட்டார்கள். இக் காலத்தில் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் முத்தம் நெற்றியில் கொடுக்கப்படு கின்றது. துருக்கியர் தமது கைகளை முத்தமிட்டுப் பின் தமது கையை நெற்றியில் வைப்பர். புயல் காற்றுக்கு மரியாதையாக அராபியர் தமது கையை முத்தமிடுவர். இவ்வாறு சந்திரனுக்கு மரியாதை செய்வதைப்பற்றி கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. இவ்வாறே திபேத்தியர் சூரியனை வணங்கினர்.

முத்தம் என்பது கைகுலுக்குவது போன்ற ஒரு மரியாதைக் குறி. பழைய வீரர்கள் (Knights) இக் காலப் போர்வீரர் கைகுலுக்குவதுபோல முத்தமிட்டுக் கொண்டார்கள். சமாதானமான எதிரிகள் முத்தமிட்டுக் தமது சமாதானத்தை அறிவித்தார்கள். முத்தம் கலியாணத்தின் அடையாளமாயு மிருந்தது. பழைய பிரான்சிலும் மத்திய கால பிரான்சிலும் தனது கணவனல் லாத பிற ஆடவனை முத்தமிட்டவள் வியபிசாரக் குற்றம் சாட்டப்பட்டாள். வேல்ஸ் நாட்டில் முக்கியமான சில காலங்களில் மாத்திரம் முத்தம் பயன்படுத்தப்பட்டது. ஒருவனின் மனைவி பிறனொருவனை முத்தமிட் டால் கணவன் அவளை நீக்கிவிடலாம். பழைய கிறித்துவர் முத்தத்தின் பயனைப் பெரிதும் அடைந்தனர். வேல்ஸ் மக்களின் கருத்துக்கு மாறாக இது சமய சம்பந்தமும் உடையதாயிருந்தது. பழைய கிறித்துவ கோயில் களில் ஞான முழுக்கு (Baptize) ஆட்டப்பட்டவர், முழுக்காட்டியவரால் முத்தமிடப்பட்டார். இன்றும் புதிதாக பிசுப் பாண்டவரால் குரு ஆக்கப்படு பவர் முத்தத்தைப் பெறுகின்றனர்.

கிறித்துவருடைய கிரியைகளுள் சமாதான முத்தம் மிகவும் முக்கியமுடையது. உரோமரும் கிரேக்கரும் வணக்கத்தில் முத்தத்தைப் பயன்படுத்தினார்கள். ஹேர்குலிஸ் விக்கிரகத்தின் தலையும் இதழும் முத்தமிடுவதால் அவ்விக்கிரகம் தேய்ந்து போயிருந்தமையை சிசிரோ (Cicero) என்பவர் குறிப்பிட்டுள்ளார். உரோமச் சக்கரவர்த்திகளை மரியாதை செய்வது அவர் உடையைத் தொட்டுக் கைகளை இதழ்களில் வைப்பது அல்லது உடையை முத்தமிடுவது. இது அவர் பாதத்தை அல்லது முழந் தாளை முத்தமிடுவதாக மாறியுள்ளது. பிரபு ஒருவனின் நிலத்தில் இருக்கும் குடியானவன் பிரபுவின் தொடையில் முத்தமிட்டான்.

உரோமரும் கிரேக்கரும் கடவுள் விக்கிரகங்களை முத்தமிட்டார்கள். பழைய அராபியரும் இவ்வாறே செய்தனர், வீட்டுக்கு வெளியே செல்லும்போதும், வீட்டினுள்ளே நுழையும்போதும் அவர்கள் இல் உறை தெய்வங்களை முத்தமிட்டார்கள். பீற்றர் ஞானியார் விக்கிரகத்தின் பெரு விரலை உரோமன் கத்தோலிக்கர் முத்தமிட்டார்கள்.

முசிலிம் மக்கள் மெக்காவிலுள்ள காபா என்னும் கல்லை முத்த மிடுவார்கள். அங்கு சுவரில் ஒரு கறுப்புக்கல் காணப்படுகிறது. முசிலிம் மக்கள் அது சுவர்க்கத்தினின்றும் விழுந்த கல் என நம்பி வருகிறார்கள். அது முன் வெண்மையாயிருந்தது; ஆனால் அதை பாவமுள்ளவர்கள் முத்த மிடுவதால் கறுப்பாகமாறியுள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர். ஏபிரேயர் கன்றுக்குட்டிகளை முத்தமிட்டார்கள். பால் தெய்வம் முத்தமிடப்பட்டது. எபிரேயர் கோயிலின் நிலத்தை முத்தமிட்டார்கள். புத்தகத்தை முத்தமிடுதல் பழைய காலஞ் சத்தியஞ் செய்யும் முறையாகும். ஐரோப்பியர் நியாயத் தலத்தில் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டை முத்தமிட்டுச் சத்தியம் செய்தார்கள்.